நீ வரும் வரை அப்பா உடல் வீட்டில்தான் இருக்கும்.. தாய் உறுதி.. கண்ணீருடன் பொது தேர்வு எழுத சென்ற மாணவி
கடலூர்: கடலூர் அருகே தந்தை இறந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு செல்ல மனமில்லாமல் அழுது கொண்டே அவரது மகள் தேர்வு கூடத்திற்கு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கடலூர் புகைப்பட கலைஞர் சிவக்குமார் என்பவர் கடலூர் திருப்பாப்புலியூர் பூ மார்க்கெட் அருகில் ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த 2005ஆம் ஆண்டு பரமேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அவந்திகா என்று 15 வயதில் ஒரு பெண்ணும் திருமுருகன் என்று 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சிவகுமார் தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் தன்னை சார்ந்த புகைப்பட கலைஞர்களுக்காகவே பெருமளவு அர்ப்பணித்து வந்தார்.

மாரடைப்பு
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு புதுவை மாநிலம் காட்டுகுப்பம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது யாருமே எந்த உறவினர்களும் பண உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது.

முழு செலவை ஏற்ற புகைப்பட கலைஞர்கள்
எனினும் புகைப்படக் கலைஞர்கள் ஒன்று திரண்டு முன்வந்து முழு செலவையும் ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை கடலூர் சாவடி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று கணித தேர்வு
இந்நிலையில் அவரது மகள் அவந்திகா கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இன்று கணிதத் தேர்வு நடைபெறுகிறது. அப்பாவை விட்டு போகமாட்டேன் என தேர்விற்கு செல்ல மனமில்லாமல் அவந்திகா அழுதார்.

மாணவியை தேற்றிய உறவினர்கள்
ஆனால் அவரை உறவினர்கள் தேற்றி, 10 ஆம் வகுப்பு தேர்வு என்பது முக்கியமானது. உன் படிப்புதான் உன் தந்தையின் கனவு என கூறி அந்த சிறுமியை தேற்றி பள்ளிக்கு செல்ல ஆயத்தப்படுத்தினர். புத்தக பையை எடுத்துக் கொண்டு வந்த அவந்திகா அதிலிருந்த தேர்வு நுழைவுச் சீட்டை அப்பா வைக்கப்பட்டுள்ள ஐஸ்பாக்ஸ் மீது வைத்து ஆசீர்வாதம் வாங்கினார்.

தாய் உறுதி
பின்னர் உறவினர்கள் அந்த சிறுமியை கட்டி அணைத்து தேர்வுக்கு சென்று நன்றாக எழுதுமாறு அறிவுறுத்தினர். எனினும் அவந்திகாவுக்கு செல்ல மனமில்லை இதனால் அந்த சிறுமியின் தாய், அவந்திகாவை கட்டி அணைத்து "நீ தேர்வு முடித்துவிட்டு வரும் வரை அப்பாவை வீட்டிலேயே வைத்திருக்கிறோம்" என கூறினார்.

நெகிழ்ச்சி
இதையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே உறவினர் ஒருவருடன் சென்றார். தனது தந்தைக்கு பிறகு குடும்ப சுமையை சிறுமி சுமப்பதற்கு ஆயத்தமாகிவிட்டார். இந்த சம்பவத்தை பார்த்து அந்த பகுதி மக்களே கண்ணீர் கடலில் மூழ்கினர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.