2 வயது குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லை.. குடிக்க காசில்லாததால் குழந்தையை கடத்திய தவெக நிர்வாகி கைது!
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தையை சாக்லேட் தருவதாகக் கூறி கடத்திச் சென்ற தமிழக வெற்றி கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் குடிக்க காசில்லையென்று குழந்தை அணிந்திருந்த தங்க தாயத்திற்காக கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு பத்திரக் கோட்டை பகுதியில் 2 வயது பெண் குழந்தை சாலையில் விளையாடி கொண்டு இருந்தது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு போதை ஆசாமி திடீரென்று பெண் குழந்தையை கடத்திச் சென்றதாக கூறப்படுகின்றது.
குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாமல் தேடிக்கொண்டிருந்தனர் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் பெண் குழந்தையை வாலிபர் ஒருவர் பைக்கில் கொண்டு சென்றதாக கூறினார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாக நடுவீரப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிரமாக சோதனை சாவடிகள் அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்த மர்ம நபர் கடலூர் அடுத்த புலியூர் காட்டு சாகை அம்பலவாணன் பேட்டை பகுதியில் குழந்தையை இறக்கி விட்டு சென்றுள்ளார்.
2 வயது பெண் குழந்தை சாலை ஓரத்தில் யாரும் இல்லாமல் இருப்பதாகவும் குழந்தையை அவ்வழியாக சென்ற விவசாயி மீட்டு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து நடுவீரப்பட்டு போலீசார் மற்றும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கடத்தப்பட்ட இரண்டு வயது குழந்தை என தெரிய வந்தது இதனை தொடர்ந்து இரண்டு வயது குழந்தையை உடனடியாக கடலூர் குள்ளஞ்சாவடி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை நலமுடன் இருப்பதை உறுதி செய்தனர் இதனைத் தொடர்ந்து அந்த குழந்தை உடனடியாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் குழந்தை கடத்தல் குறித்து நடுவீரப்பட்டு மற்றும் குள்ளஞ்சாவடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சம்பவ இடத்தில் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டதில் அப்பாச்சி பைக்கில் கடத்தப்பட்ட குழந்தையை முன்னால் உட்கார வைத்துக் கொண்டு ஒட்டி சென்றது தெரிய வந்தது.
இதன் பேரில் தொடர் விசாரணை மூலம் பைக்கில் சென்ற போதை ஆசாமி குறித்து அடையாளம் காணப்பட்டு, வழக்கில் தொடர்புடைய புலியூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகி வெற்றிவேல் வயது 27, என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த பவுன் தாயத்திற்காக கடத்தியதாக தெரிய வந்ததை அடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட விஜய் படத்துடன் கூடன் அப்பாச்சி பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் வெற்றிவேலை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து பேட்டி அளித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியதாவது," குழந்தை கடத்தப்பட்டதாக வந்த தகவலை தொடர்ந்து உடனடியாக அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றது தெரிய வந்தது. உடனடியாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாகன சோதனை நடைபெற்றது. அடுத்து போதை ஆசாமி குழந்தையை விட்டு விட்டு தப்பி சென்றான். காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர். விசாரணையின் போது அந்த ஆசாமி நகைக்காக போதையில் குழந்தையை கடத்திச் சென்றதாக ஒப்புக்கொண்டான்" எனக் கூறினார்.














Click it and Unblock the Notifications