மாணவிக்கு வீரவணக்கம்.. அடக்கம் செய்யும்போது இடுகாட்டில் எழுந்த கோஷம்.. கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்!
கடலூர் : பள்ளி மாணவி உடல் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டபோது, அமைச்சர் கேட்டுக்கொண்டபடி மவுன அஞ்சலி செலுத்தியபிறகு சிலர் 'வீரவணக்கம்' என முழக்கமிட்டனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவியின் உடல் இன்று அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் அடக்கம் செய்யப்பட்டது.
அமைச்சர் சி.வெ.கணேசன், இடுகாட்டுக்கும் சென்று மாணவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் திடீர் விபத்து.. லாரி மோதியது.. என்ன நடந்தது?\

மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், மாணவிக்கு நீதி கேட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் வன்முறையாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது.

மாணவி உடல்
மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. பெற்றோர்கள் மறு பிரேத பரிசோதனை கேட்டதன்படி மீண்டும் ஒரு முறை மறு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, இன்று காலை மாணவியின் உடலை வடக்கு மண்டல ஐ.ஜி தேன்மொழி முன்னிலையில் பெற்றுக்கொண்டனர்.

சொந்த ஊரில்
மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான பெரியநெசலூருக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உடல் அடக்கம்
தொடர்ந்து, உறவினர்கள், ஊர் மக்கள் உள்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மாணவியின் இறுதிச் சடங்கை செய்து முடிக்க, இடுகாட்டில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து மாணவியின் உடல் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவி உடல் மீது பாடப்புத்தகம் ஒன்றும் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அமைச்சர் கணேசன் மவுன அஞ்சலி
மாணவி உடல் அடக்கம் செய்யப்பட்டபோது அமைச்சர் சி.வெ.கணேசன் கண்ணீர் விட்டு அழுதார். மேலும், மாணவியின் ஆன்மா அமைதியாக இளைப்பாற வேண்டி சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துமாறு அமைச்சர் கணேசன் கேட்டுக்கொண்டார். அதன்படி, அங்கிருந்தவர்கள் அனைவரும் மாணவிக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

வீரவணக்கம்
அதைத்தொடர்ந்து, அங்கு குவிந்திருந்தவர்களில் ஒருவர், மாணவிக்கு வீரவணக்கம் என முழங்க, அங்கு கூடியிருந்தவர்கள் வீரவணக்கம் என தொடர்ந்து கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து, கண்ணீருடன் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications