மயான குழியில் கல் உப்பு.. உடலோடு புத்தகங்கள்..குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தந்தை உருக்கம்
உயிரிழந்த மாணவியின் உடலுடன் அவர் படித்த புத்தகங்களையும் சேர்த்து வைத்து நல்லடக்கம் செய்துள்ளனர். மயானகுழியில் கல் உப்பை கொட்டி அதன் மீது உடலை வைத்துள்ளனர்.
கடலூர்: மகளின் மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். மயான குழியில் கல் உப்பு தூவப்பட்டு மாணவி உடலோடு புத்தகங்கள் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் தனியார் மேல்நிலைபள்ளியில் மாணவி கடந்த ஜூலை 12ம் தேதி பலியானார். இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் அங்கு கலவரங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் பலியான மாணவியின் உடல் இன்று அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்த நிலையில்,நீதிமன்ற உத்தரவை அடுத்து உடல் மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரியநெசலூர் கிராமம்
இன்று காலை மாணவியின் உடல் மருத்துவமனையில் இருந்து பெரிய நெசலூர் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் வரும் வழியில் லாரி ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. ஆனால் இதில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. 8.30 மணி அளவில் மாணவியின் உடல் அவரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இறுதிச்சடங்கு
மாணவி உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவும் உள்ளூர் மக்கள், உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மாணவியின் உடலுக்கு பெரியநெசலூர் இடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. தந்தை கண்ணீர் மல்க மாணவியின் உடலை சுற்றி வந்தார். அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக மயானத்தில் போலீஸ் குவிக்கப்பட்டனர்.

மயானக்குழியில் கல் உப்பு
இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மயானக்குழியில் மாணவியின் உடலை வைக்கும் முன்பாக நிறைய கல் உப்பு தூவப்பட்டது. மாணவியின் உடல் எளிதில் கெட்டுப்போகாமல் இருக்க கல் உப்பை கொட்டி அதன் மீது உடலை வைத்து அடக்கம் செய்தனர்.

உடல் மீது புத்தகங்கள்
கூடவே மாணவி படித்த புத்தகத்தை உடல் மீது வைத்து, கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். மாணவியின் உடலை முதலில் எரிப்பதாகத்தான் முடிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர்தான் புதைக்க முடிவு செய்தனர். அதற்கான காரணத்தையும் உறவினர்கள் தெரிவித்தனர். எங்கள் வழக்கப்படி உடலை தகனம் செய்யவே நினைத்தோம். ஆனால் எங்களுக்கு இறப்பில் சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனையில் எங்களுக்கு திருப்தி இல்லை. நாங்கள் சொன்ன டாக்டரை அனுமதிக்கவில்லை.

தண்டனை கிடைக்க வேண்டும்
பிரேத பரிசோதனை ரிப்போர்ட் எப்படி வர போகிறது என்று தெரியவில்லை. ஒருவேளை ரிப்போர்ட் மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய கோரிக்கை வைப்போம். இதற்காக உடலை புதைக்க முடிவு செய்தோம். தகனம் செய்தால் அதன்பின் பிரேத பரிசோதனை செய்ய முடியாது. அதனால்தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். பிரேத பரிசோதனையில் உண்மை வரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது என்று கூறியுள்ளனர். கண்ணீருடன் இறுதிச்சடங்கு செய்த தந்தை ராமலிங்கமோ, மரணத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications