100 கோடி டோஸ் மைல்கல்லை தொட்ட இந்தியா.. 278 நாட்களில் செம சாதனை.. மலைக்க வைக்கும் புள்ளி விவரம்!
டெல்லி: 100 கோடி டோஸ்கள் கொரோனா வேக்சின் போட்டு இந்தியா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. ஜனவரி 16ம் தேதி தொடங்கிய இந்த வேக்சின் விநியோகம் இன்று பெரிய மைல்களை எட்டியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் இன்னும் கொரோனா பரவல் குறையவில்லை. கொரோனா தினசரி கேஸ்கள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,359 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34,126,682 பேர் இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 160 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 452,844 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

கொரோனா கேஸ்கள்
ஒரு பக்கம் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் லேசாக அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இந்தியா 100 கோடி கொரோனா டோஸ்களை போட்டு சாதனை படைத்துள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதி இந்தியாவில் கொரோனா வேக்சின் டிரைவ் தொடங்கியது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பின் 45 வயதுக்கு மேற்பட்ட நோய் கொண்ட நபர்கள், பின்னர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதன்பின் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று பகுதி பகுதியாக பிரித்து இந்த வேக்சின் டிரைவ் நடத்தப்பட்டது.

18 வயதுக்கும் மேற்பட்டோர்
முதலில் மத்திய அரசு வேக்சின் செலுத்தும் பணிகளை மேற்கொண்டது. அதன்பின் மாநில அரசுகளுக்கு போதிய வேக்சின் கிடைக்காத காரணத்தால் மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய முயன்றது. அதன்பின்தான் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு மத்திய அரசின் வேக்சின் கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தது. 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் இலவசமாக அரசு வேக்சின் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

18 வயது
இதையடுத்தே மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் இலவச வேக்சின் கொடுப்பதாக அறிவித்து, வேக்சின் டிரைவை தொடங்கியது. கடந்த சில நாட்களாக வேகமாக நடத்தப்பட்ட வேக்சின் முகாம்கள் மூலம் தற்போது நாடு முழுக்க 100 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் வேக்சின் முகாம்கள், சிறப்பு வேக்சின் முகாம்கள், வீடு வீடாக செலுத்தப்பட்ட வேக்சின் என்று பல்வேறு காரணங்களால் இந்த மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது.

தனி நபர் சாதனையா?
இந்த 100 கோடி வேக்சின் சாதனை என்பது தனி நபர் சாதனை கிடையாது. பல லட்சம் மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள், அரசு அலுவலர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மக்கள் சேர்ந்து நிகழ்த்திய சாதனை ஆகும். 100 கோடி டோஸ்கள் கொரோனா வேக்சின் போட்டு சாதித்த இந்தியா கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.. இந்தியாவில் முதல் 0-10 கோடி டோஸ்கள்- 86 நாட்களில் போடப்பட்டது. ஆம் முதல் 10 கோடி டோஸ்களை போட இந்தியா 3 மாதங்கள் வரை எடுத்துக்கொண்டது. பின் 10-20 கோடி டோஸ்கள்- 46 நாட்களில் போடப்பட்டது.

வேக்சின் சாதனை
அதன்பின்தான் வேக்சின் போடும் வேகம் அதிகரிக்கப்பட்டது.
- 20-30 கோடி டோஸ்கள்- 28 நாட்களில் போடப்பட்டது
- 30-40 கோடி டோஸ்கள்- 24 நாட்களில் போடப்பட்டது
- 40-50 கோடி டோஸ்கள்- 19 நாட்களில் போடப்பட்டது
- 50-60 கோடி டோஸ்கள்- 19 நாட்களில் போடப்பட்டது
- 60-70 கோடி டோஸ்கள்- 13 நாட்களில் போடப்பட்டது
- 70-80 கோடி டோஸ்கள்- 11 நாட்களில் போடப்பட்டது (மிக குறைந்த நாட்களில் போடப்பட்டு சாதனை)
- 80-90 கோடி டோஸ்கள்- 14 நாட்களில் போடப்பட்டது
- 90-100 கோடி டோஸ்கள்- 19 நாட்களில் போடப்பட்டது
கடைசி 10 கோடி டோஸ்கள் 19 நாட்களில் இந்தியாவில் போடப்பட்டுள்ளது. மொத்தமாக 278 நாட்களில் 100 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.

எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது
ஆனால் இது டோஸ் கணக்கு தானே ஒழிய மக்கள் கணக்கு கிடையாது. இந்தியாவில் இதுவரை 70,83,88,485 பேருக்கு மட்டுமே ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதோடு வெறும் 29,18,32,226 பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் முழுமையாக போடப்பட்டுள்ளது. இதுவரை 18-44 வயது கொண்டவர்களில் 46,46,62,265 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30,36,43,267 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 515646638 ஆண்களுக்கும், 478771921 பெண்களுக்கும் வேக்சின் போடப்பட்டுள்ளது.

முகாம்கள்
இந்தியாவில் மொத்தம் 74,583 வேக்சின் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. 72,396 அரசு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. 2,187 தனியார் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தில் இதுவரை 12,21,60,335 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 9,32,25,506 டோஸ் வேக்சின் போடப்பட்டள்ளது. மேற்கு வங்கத்தில் 6,85,28,936 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
குஜராத்தில் 6,76,87,913 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5,39,60,165 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இன்னும் 70 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு இரண்டாவது டோஸ் வேக்சின் போடவேண்டும். 30 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் வேக்சின் போட வேண்டும் என்பதால்.. இந்தியா வேக்சினேஷன் டிரைவில் கடந்த செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்பதே நிதர்சனம்!












Click it and Unblock the Notifications