இதுதான் டிரெண்ட்! டெல்லியை அள்ளும் பாஜக! கெஜ்ரிவால் காங்கிரஸ் இணைந்தாலும் பூஜ்ஜியம் தான்! புது சர்வே
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தலைநகர் டெல்லியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து மூட் ஆப் தி நேஷன் புதிய சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தல் என்பது டெல்லி அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி தேசிய தலைநகர் டெல்லியில் அனைத்து இடங்களையும் கைப்பற்றும் என்று மூட் ஆஃப் தி நேஷன் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

இந்த சர்வே முடிவுகள் அப்படியே தேர்தல் முடிவுகளாக வந்தால் அது இப்போது டெல்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு மிக பெரிய அடியாகவே இருக்கும்
பாஜக: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் இதுபோல ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக பெற்றிருந்த நிலையில், இந்த முறையும் அதே தான் நடக்கும் என்று மூட் ஆஃப் தி நேஷன் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இந்த முறை பாஜகவுக்கு டெல்லியில் 57 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணிக்கு டெல்லியில் 40% வாக்குகள் கிடைத்தாலும் கூட அவர்களால் எந்தவொரு தொகுதியிலும் வெல்ல முடியாது என்று இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
வாய்ப்பே இல்லை: எதிர்க்கட்சி கூட்டணி, ஆளும் கட்சிக்கு எதிராக ஐக்கிய முன்னணியை முன்வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சுமார் 40 சதவீத வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை எதிர்க்கட்சிகளுக்கு 41% வாக்குகள் கிடைத்த நிலையில், இந்த முறை அதைக் காட்டிலும் ஒரு சதவிகித வாக்குகள் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அங்கு அவர்களால் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்கு வங்கி சுருங்குவதை இதில் நாம் காணலாம்.. இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மிக்கு மட்டும் என்று பார்த்தால் வெறும் 15 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த கால தேர்தல்கள்: கடந்த 2019 லோக்சபா தேர்தலில் டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது. பாஜக அந்தத் தேர்தலில் 56% வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்துக் களமிறங்கிய நிலையில், அவர்களால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. காங்கிரஸ் கட்சி 22% வாக்குகளையும், ஆம் ஆத்மி 18% வாக்குகளையும் மட்டுமே பெற்றன.
அதேநேரம் அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2020இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் முடிவுகள் நேர்மாறாக இருந்தது. அங்கு மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், அதில் ஆம் ஆத்மி 53% வாக்குகள் உடன் 62 இடங்களை அள்ளியது. பாஜக 38% வாக்குகளுடன் 8 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 4% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.
டிரெண்ட்: இது தலைநகர் டெல்லியில் நடக்கும் தேர்தல்களில் ஒரு வித டிரெண்ட் நிலவுவதைக் காட்டுகிறது. அதாவது சட்டசபைத் தேர்தல்களில் அங்கே ஆம் ஆத்மி கட்சிக்குப் பொதுமக்கள் வாக்களித்தாலும் கூட லோக்சபா தேர்தல் என்று வரும் போது தேசிய கட்சிகள், அதிலும் குறிப்பாக பாஜக தான் மக்களின் தேர்வாக இருக்கிறது. இந்த மூட் ஆப் தி நேஷன் கருத்துக்கணிப்பிலும் அதே டிரெண்ட் தொடரும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications