"60% பேர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர், அடுத்த 3 நாட்களில் 26 சிறப்பு விமானங்கள்!" மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உக்ரைன் நாட்டில் போர் 5 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. அங்கு சுமாப் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைப் பகுதிகளில் உணவு, குடிநீர் கூட இல்லாத சூழலில் காத்திருக்க வேண்டி உள்ளதாகவும் அங்கு இருக்கும் உக்ரைன் காவலர்கள் மாணவர்களைத் தாக்குவதாகவும் தகவல் வெளியானது.

மீட்பு பணிகள்
இந்தச் சூழலில் உக்ரைனில் உள்ள மாணவர்களைப் பத்திரமாக இந்தியா அழைத்து வருவது தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. கடந்த 48 மணி நேரத்தில் 4ஆவது முறையாகப் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். மாணவர்களைத் தாயகம் அழைத்து வரும் பணிகளைப் பிரதமர் மோடி நேரடியாகக் கண்காணித்து வருவதாகப் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், அடுத்து வரும் நாட்களில் உக்ரைன் நாட்டில் இருந்து இயக்கப்பட உள்ள சிறப்பு விமானங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது

26 விமானங்கள்
இது தொடர்பாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறுகையில், "உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர அடுத்த மூன்று நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இந்திய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களும் அடக்கம். ருமேனியா, ஹங்கேரி நாடுகளைத் தவிர, போலந்து மற்றும் ஸ்லோவாக் குடியரசு மூலமும் இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த நாடுகள் வழியாக இதுவரை 7700 பேர் வெளியேறி உள்ளனர். அவர்களில் 2000 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4000 முதல் 5000 பேர் விமானங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

60% வெளியேறிவிட்டனர்
வெளியுறவுத் துறை முதல் எச்சரிக்கையை வெளியிட்ட போது அங்கு 20,000 இந்திய மாணவர்கள் இருந்தனர். அதில் சுமார் 60% பேர், அதாவது 12000 பேர் ஏற்கனவே உக்ரைனை விட்டு வெளியேறிவிட்டனர். மீதமுள்ள 40 சதவீதத்தில், ஏறத்தாழ பாதிப் பேர் போர் நடைபெற்று வரும் கார்கிவ், சுமி பகுதியில் உள்ளனர், மற்ற பாதி ஏற்கனவே உக்ரைனின் மேற்கு எல்லைகளை அடைந்துவிட்டனர். அல்லது மேற்குப் பகுதியை நோக்கிச் செல்ல தொடங்கிவிட்டனர். அதாவது சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் போர் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர்.

கீவ் நகரில் யாரும் இல்லை
இந்தியர்கள் அனைவரும் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டனர். எங்களிடம் உள்ள தகவல்படி இப்போது யாரும் கீவ் நகரில் இல்லை. இது குறித்து நாங்கள் நடத்திய விசாரணைகளிலும், கீவ் நகரில் இருந்து அனைவரும் வெளியேறிவிட்டனர் என்பதையே காட்டுகிறது. போலந்து வழியாக இன்று காலை உக்ரைனுக்கு முதற்கட்டமாக மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற நிவாரணப் பொருட்கள் இருந்தன. நாளை மற்றொரு விமானம் போலந்து வழியாக இயக்கப்படும்" ென்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications