தமிழகம் உள்பட 8 மாநிலத்தில்.. அதுவும் 25 மாவட்டங்களில் தான்..கொரோனாவால் கொத்துக்கொத்தாக மரணம்
டெல்லி: கொரோனாவால் இந்தியாவில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 1,03,569 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனாவால் இறந்த 48% பேர் எட்டு மாநிலங்களில் 25 மாவட்டங்களை சேர்ந்தவர் ஆவார்.
நாட்டிலேயே அதிக இறப்புகளை சந்தித்த 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் இறப்பை குறைக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி, திங்கள்கிழமை ஒரு நாளில் மட்டும் 884 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 29% க்கும் அதிகமானோர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மத்தியப் பிரதேசம் ஆகிய பத்து மாநிலங்களில் தான் மொத்தம் 80 சதவீதம் பேர் இறந்துள்ளனர்.

தமிழகம் 2வது இடம்
மகாராஷ்டிராவில் இதுவரை 38,347 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இது அதற்கு அடுத்த இடத்தில் உள்ள தமிழ்நாட்டை விட மிக அதிகமாகும், தமிழகத்தில் இதுவரை 9,917 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். 3வது இடத்தில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் 9,370 பேர் பலியாகி உள்ளனர். 4வது அதிக இறப்பை உத்தரப்பிரதேசம் சந்தித்துள்ளது. அங்கு இதுவரை 6,153 பேர் இறந்துள்ளனர்.

மத்திய அரசு புதிய யுக்தி
இறப்பு விகிதம் அதிகம் உள்ள மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் இதுபற்றி கூறும் போது. பெரும்பாலான இறப்புகள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தான் அதிகமாக உள்ளது. அந்த மாவட்டங்கள் அமைந்துள்ள மாநிலங்களை குறிப்பிட்ட உத்திகளை வகுக்கவும், இறப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுள்ளோம். மொத்த பாதிப்பில் இறப்பு விகிதத்தை 1% க்கும் குறைவாக கொண்டுவருவதே எங்கள் இலக்கு.

தமிழகத்தில் ஒன்று
மகாராஷ்டிராவில் 15 மாவட்டங்களும், கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் தலா இரண்டு மாவட்டங்களும், தமிழ்நாடு, பஞ்சாப், உ.பி. மற்றும் ஆந்திராவில் தலா ஒரு மாவட்டங்களில் தொற்றால் இறப்போர் அதிகமாக உள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 56 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர். இந்தியாவின் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்த போதிலும், சில மாநிலங்களில் உள்ள நகரங்களின் நிலை தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.

மத்திய அரசு தகவல்
இதனிடையே கொரோனாவை எதிர்த்து போராடி வரும் முன்கள வீரர்களான சுகாதார ஊழியர்களுக்கு ரூ .50 லட்சம் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 95 பேருக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை, 176 பேர் 50 லட்சம் காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதை பரிசீலித்து வருகிறோம் என்று சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.

என் 95 மாஸ்க்
இதனிடையே மத்திய அரசு N-95 / FFP-2 முககவசங்களுக்கான ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எந்த நாட்டிற்கும் என்95 உள்பட அனைத்து வகையான மாஸ்க்குகளை தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியும். வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications