காங்கிரஸ் அடுத்த தலைவர் யார்.. 5 எம்.பி.க்களும், அவசர கடிதமும்.. டெல்லியில் நடப்பது என்ன?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்தலின் வெளிப்படைத் தன்மை குறித்து கட்சியின் 5 எம்பிக்கள், கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த கடிதத்தில், கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் நபர்களின் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடிதம்
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதையடுத்து, கட்சிக்கு புதிய தலைவர் வேண்டும் எனக்கோரி கடந்த 2020ல் முக்கிய தலைவர்கள் 23 பேர் அப்போதைய தலைவராக இருந்த சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால் கடிதம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி தலைவர்கள் சிலர் கட்சியைவிட்டு விலகத்தொடங்கினர்.

தேர்தல்
இந்நிலையில் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை வரும் செப்.22ம் தேதியும், செப். 24 வேட்புமனு தாக்கல் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய செப்.30ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அக்.17ம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை அக்.19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வலியுறுத்தல்
இந்த நிலையில் உட்கட்சி தேர்தலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை குறித்து கவலை தெரிவித்து கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு 5 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். சசி தரூர், கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் போர்டோலோய் மற்றும் அப்துல் கலீக் ஆகியோர் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் உட்கட்சி தேர்தலில் வாக்களிக்கும் பிரதிநிதிகள் (வாக்காளர் பட்டியல்) பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கடிதம்
இவ்வாறு வாக்காளர் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுவது தொடர்பாக CEAக்கு (கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம்) ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அதனை பாதுகாப்பாக பகிர்ந்துகொள்வது குறித்த நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, வெளிப்படைத்தன்மை பற்றிய எங்கள் அக்கறை தொடரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கெனவே இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தியிடம் கட்சியின் தலைவர் பதவி குறித்த கேள்விக்கு, உட்கட்சி தேர்தல்தான் பதில் சொல்லும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications