ஓமிக்ரான் பீதி: டெல்லியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு
டெல்லி: கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக தலைநகரான டெல்லியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது.
சன்னி லியோனுக்கு 3 நாள் கெடு... இல்லையென்றால்.. எச்சரிக்கும் ம.பி. அமைச்சர்
ஓமிக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அசாம், கர்நாடகாவில் ஊரடங்கு
இதன் தொடர்ச்சியாக அசாம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு
கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தேசிய தலைநகரான டெல்லியில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

290 பேருக்கு கொரோனா தொற்று
டிசம்பர் 27ஆம் தேதியான திங்கள்கிழமையில் இருந்து இந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் எனவும், அரசு விதித்துள்ள கொரோனா மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 290 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
இந்தநிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவும், பண்டிகை காலங்களுக்கு முன் கொரோனா பரவலுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறியுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் புதிதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த உத்தரவின் மூலம் தலைநகரான டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.