இந்தியாவில் கடந்த 2 வருடங்களில் 21% அதிகரித்த மரண தண்டனைகள்.. தேசிய சட்டப் பல்கலை. ஆய்வில் தகவல்
டெல்லி: கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மரண தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
2021ம் ஆண்டு கொரோனாவால் பல நாட்கள் நீதிமன்றங்கள் முறையாக இயங்காமல் இருந்தன. இதனால் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு வழக்குகள் தடைபட்டன.
இதனால் இந்தியாவில் 2020ம் ஆண்டு 404 பேர் மரண தண்டனை பெற்றனர். அதுவே 2021ம் ஆண்டு 488 பேர் மரண தண்டனை பெற்றனர். இரண்டு ஆண்டுகளில் மரண தண்டனைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியா
மிகக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்து வருகின்றன. பெரும்பாலும் கொலைகள் மற்றும் பாலியல் வன்முறையுடன் இணைந்த கொலைகளுக்கு இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்தத் தண்டனைகள் இந்திய குற்றவியல் சட்ட விதிகளின் (1860) கீழ் நிறைவேற்றப் படுகின்றன. 1947ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, அதிகபட்ச எண்ணிக்கையில் மரண தண்டனைகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அறிக்கை
டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மரண தண்டனைக் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகிறது.
தற்போது ''இந்தியாவில் மரண தண்டனை: 2021க்கான ஆண்டு அறிக்கை'' என்ற பெயரில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் மரண தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை மிக அதிகபட்சமாக 563ஆக இருந்தது. அதற்கு அடுத்ததாக கடந்த 2021ம் ஆண்டு பதிவாகி இருக்கிறது.

மேல் முறையீடு
கடந்த 2020 ஆம் ஆண்டில் 78 மரண தண்டனைகளை விதித்திருந்த விசாரணை நீதிமன்றங்கள், 2021ஆம் ஆண்டில் 144 தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்துள்ளன. உச்ச நீதிமன்றம் கடந்த 2019ல் மட்டும் மரண தண்டனை தொடர்பான 28 மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 6 வழக்குகளை மட்டுமே விசாரித்து இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக நீதிமன்றங்களில் மேல்முறையீட்டு மனுக்கள் குறைவான எண்ணிக்கையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதே காரணம் என்று தெரியவந்துள்ளது.

மரண தண்டனை
மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த ஆண்டின் இறுதியில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் இருந்ததைப் போல அல்லாமல், பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களை காட்டிலும், கொலை குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஒரு பக்கம் மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று குரல்கள் அதிகரித்து வருகின்றன. இன்னொருபக்கம் அரபு நாடுகளைப் போல தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன. இந்த இரு வேறு குரல்களுக்கு நடுவே தான் இரண்டு வருடங்களில் 21 சதவீதம் அளவுக்கு மரண தண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications