சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடு... இந்தியாவை கடுமையாக பாதிக்கும்! ரகுராம் ராஜன் எச்சரிக்கை
டெல்லி: இந்தியா சிறுபான்மை மக்களுக்கு எதிரானது எனும் பிம்பம் இந்திய நிறுவனங்களையும், இந்திய பொருட்களுக்கான வெளிநாட்டு சந்தைகளையும் பாதிக்கும். மேலும், இந்தியா மீது வெளிநாடுகளுக்கு இருக்கும் நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக மதம்சார்ந்த மோதல்கள் அதிகரித்துள்ளன. டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்தன. இதில் வாகனங்கள் தீவைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பிரச்சனையை தீர்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன. மேலும், மதம்சார்ந்த மோதல்கள் தொடர்ந்தால் அது இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் எனவும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், சிகாகோவின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ் பேராசிரியருமான ரகுராம் ராஜன் இந்தியாவின் சிறுபான்மை மக்கள் குறித்து பேசியுள்ளார். டைம்ஸ் நெட்வொர்க் இந்திய பொருளாதார மாநாட்டில் ரகுராம் ராஜன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவின் பலம் என்ன
இந்தியாவின் பலம் என்பது ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மை தான். இதுதான் நற்சான்றிதழாகவும் அறியப்படுகிறது. ஆனால் தற்போதைய மோதல்களால் நமக்கு தான் இழப்பு ஏற்படும். நாம் ஜனநாயகத்தின் அடிப்படையி்ல அனைத்து மக்களையும் சமமான மரியாதையுடன் நடத்துவதாக இருந்தால் ஏழ்மையான நாடாக இருந்தாலும் அனுதாபம் கொண்டவர்களாக மாறுவோம். நுகர்வோர் நம் நாட்டை அணுகுவர்.

இந்திய நிறுவனங்களை பாதிக்கும்
இதன்மூலம் வெளிநாடுகளுகில் உள்ள சந்தைகள் வளரும். ஒரு நாடு நல்ல நட்பு நாடா, இல்லையா என்பது நுகர்வோர்களான மக்களின் செயல்பாடு மட்டுமின்றி நாடுகளுக்கு இடையேயான சர்வதேச உறவுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. இது சிறுபான்மை மக்களை கையாளும் வகையையும் பொறுத்தது. இந்தியா சிறுபான்மை மக்களுக்கு எதிரானது எனும் பிம்பம் கட்டமைக்கப்பட்டால் அது இந்திய நிறுவனங்களையும், இந்திய பொருட்களுக்கான வெளிநாட்டு சந்தைகளையும் பாதிக்கும்.

உக்ரைன் அதிபர்
உய்குர்கள், திபெத்தியர்களை நடத்தும் வகையில் சீனா உலகளவில் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைன் உலகளவில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி ஜனநாயக கொள்கையை பாதுகாக்கும் நபராக கருதப்படுகிறார். அவரது மதிப்பு தற்போது உயர்ந்துள்ளது.

கவலையளிக்கிறது
சேவை துறை ஏற்றுமதி இந்தியர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இதை முற்றிலம் கைப்பற்ற வேண்டும். மருத்துவத் துறையில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளை பொறுத்தமட்டில் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகளை திருப்திப்படுத்தாத நிலை உள்ளது.இது இந்த துறையில் வெற்றியை கடினமாக்கும். தேர்தல் ஆணையம், அமலாக்க துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை குறைத்து மதிப்பீடு செய்வது என்பது இந்தியாவின் ஜனநாயகத்தை சிதைக்கிறது. உள்நாட்டு விவகாரங்கள் குறித்த பிற கருத்துக்களுக்கு இந்திய நிர்வாகம் முக்கிய பங்குதாரர்களுடன் மாற்றங்கள் குறித்து விவாதித்து சவால்களை சமாளிக்க வேண்டும்.

இந்தியாவில் நடந்தது என்ன
இந்தியாவில் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை விதிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான், அமெரிக்க நாடுகளில் இருந்து எதிர்ப்பு குரல் கிளம்பியது. மேலும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்பிறகு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தலைநகர் டெல்லியில் நடந்த ஊர்வலங்களின்போது இருதரப்பு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் வன்முறை நடந்த ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நிலையில் அங்கு ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் தான் ரகுராம் ராஜன் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications