ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு- பீகார் அரசின் அப்பீல் மனு- உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்!
டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கில் பீகார் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் தெரிவித்துள்ளார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக நீதியை நிறைவேற்றும் வகையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

நமது நாட்டில் 1881-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில்தான் முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. 1931-ம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு விடுதலைக்குப் பின்னர் இத்தகைய ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. முந்தைய தரவுகளின் அடிப்படையில் சமூக நீதியின் முக்கிய அங்கமான இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால் அந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான வழக்குகளில் முந்தைய காங்கிரஸ் அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களில் குழப்பங்கள் உள்ளதாக கூறுகிறது மத்திய பாஜக அரசு.
இதனால் மத்திய அரசு புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் வலியுறுத்தின. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கும் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த இடைக்கால தடை விதித்தது.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மீதான பாட்னா உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீகார் மாநில அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications