பாஜக தேசிய தலைவர் யார்? ஜனவரி 20ம் தேதி தேர்தல்.. நிதின் நபினுக்கு வாய்ப்பு.. யார் இவர்?
டெல்லி: பாஜக தேசிய தலைவராக மத்திய அமைச்சர் ஜேபி நட்டா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜனவரி 20ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 18ம் தேதியும், (நாளை மறுநாள்), வேட்புமனு மீதான பரிசீலனை ஜனவரி 19ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பாஜகவின் தேசிய தலைவராக கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜேபி நட்டா செயல்பட்டு வருகிறார். பாஜகவை பொறுத்தவரை தேசிய தலைவராக இருப்போரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் தான். அதன்பிறகு ஒருமுறை பதவி நீட்டிப்பு வழங்கப்படும். அதன்படி பார்த்தால் ஒருவர் 2 முறை அதாவது 4 ஆண்டுகள் வரை தேசிய தலைவராக செயல்படலாம்.

அந்த வகையில் ஜேபி நட்டாவின் 2 முறை பாஜக தேசிய தலைவராக தனது பதவிக்காலத்தை முடித்தார். இருப்பினும் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் அவரது பதவிக்காலம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தள்ளிப்போனது. ஒவ்வொரு மாநிலங்களிலும் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் தான் இதற்கு முக்கிய காரணம் என்று பாஜகவினர் தெரிவித்தனர்.
இதனால் தற்போது ஜேபி நட்டா 6 ஆண்டாக தேசிய தலைவர் பதவியில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது பாஜகவில் தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் தேர்தல் அதிகாரியாக கே லட்சுமண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் எம்பியாக உள்ளார். இவர் தான் தேர்தல் தேதியை இன்று அறிவித்தார்.
அதன்படி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 18 ம் தேதி தொடங்குகிறது. அதன்பிறகு ஜனவரி 19ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. பிறகு ஜனவரி 20ம் தேதி பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜேபி நட்டாவுக்கு பிறகு பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர் தற்போது பாஜகவின் தேசிய செயல் தலைவராக உள்ளார். இவருக்கு 45 வயது ஆகிறது. பீகாரை சேர்ந்தவர். பீகாரில் அமைச்சராக பணியாற்றியவர். இவர் மட்டுமே வேட்புமனுவை ஜனவரி 18 ம் தேதி தாக்கல் செய்யலாம் என்ற கூறப்படுகிறது.
பாஜகவை பொறுத்தவரை செயல் தலைவராக இருப்பவரை தேசிய தலைவராக்குவது இதற்கு முன்பு நடந்துள்ளது. தேசிய தலைவராக அமித்ஷா தனது பதவிக்காலத்தை முடிக்கும்போது செயல் தலைவராக ஜேபி நட்டா செயல்பட்டு வந்தார். அதன்பிறகு ஜேபி நட்டா தேசிய தலைவராக்கப்பட்டார். அந்த வகையில் தற்போது நிதின் நபின் தேசிய செயல் தலைவராக உள்ள நிலையில் அவர் பாஜகவின் அடுத்த தேசிய தலைவராகும் சான்ஸ் அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி பாஜக கட்சியினர் கூறுகையில், ‛‛நிதின் நபினை எதிர்த்து போட்டியிடக்கூடிய சாத்தியமான போட்டியாளர் யாராவது இருக்கிறாரா என்பதில் இப்போது அனைவரின் கவனமும் உள்ளது'' என்றனர். இருப்பினும் மற்றவர்களுக்கு சான்ஸ் குறைவாக தான் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications