மத்திய பட்ஜெட்: மன்னிப்பே கிடையாது.. மோடி, நிர்மலா சீதாராமனை ஆக்ரோஷமாக விமர்சித்த தயாநிதி மாறன்
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள் என்று லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன் ஆக்ரோஷமாக தெரிவித்தார். கோவிலுக்கு போனால் உண்டியலில் பணம் போடாதீர்.. பூசாரி தட்டில்தான் பணம் போடனும் என்று சொல்கிறவர்தானே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எனவும் தயாநிதி மாறன் கிண்டலடித்தார்.
மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுகவின் தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது: பிரதமர் மோடிக்கு தேர்தல் காலத்தில்தான் தமிழ்நாடு நினைவுக்கு வரும். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழனாய் பிறக்க வேண்டும்; தமிழைக் கற்க வேண்டும் என்பார். திருக்குறளையும் சில பழமொழிகளையும் மேற்கோள்காட்டிப் பேசுவார். ஆனால் ஒடிஷாவுக்குப் போய், உங்க மாநிலத்தை தமிழன் ஆளலாமா? என கேள்வி கேட்பார். தமிழ்நாட்டுக்கு மோடி எதுவுமே செய்யமாட்டார். தமிழ்நாட்டு மக்கள் மோடியின் இந்த துரோகத்தை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏற்கவே முடியாது: தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போதும் தமக்கு வாக்காளிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் பாடுபடுவேன் என்பார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியே தமக்கு வாக்களித்த மக்களுக்குக் கூட எதுவுமே செய்யவில்லையே. மத்திய பட்ஜெட்டில் தமக்கு ஆதரவு தந்துள்ள கூட்டணிக் கட்சிகளின் நலனைத்தானே கவனத்தில் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியை பின்பற்றுங்கள் பிரதமர் மோடி அவர்களே! மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதை ஏற்க முடியாது.
பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசு ரஷ்யாவில் இருந்து பாதி விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கியது. ஆனால் யாருக்கு லாபம்? பெட்ரோல், டீசல் விலை இன்னமும் குறையவே இல்லையே? ஏன்?
கோவை ரோடு ஷோ: கோவையில் ரோடு ஷோ நடத்தியவர் பிரதமர் மோடி. ஆனால் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லையே ஏன்? தாம்பரம்- செங்கல்பட்டு உயர்மட்ட சாலைக்கு இன்னமும் ஒப்புதல் தரவில்லை. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இப்போது வரை 1 ரூபாய் கூட மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசுதான் சொந்த நிதியில் இருந்து ரூ.12,000 கோடி செலவு செய்திருக்கிறது.
நிர்மலா சீதாராமன்: தமிழ்நாட்டுக்கு வரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவில்களுக்கு செல்வார். அங்கே போய், உண்டியலில் பணம் போடாதீர்கள்.. பூசாரிகளின் தட்டில்தான் பணம் போட வேண்டும் என்பார். இப்படியா ஒரு நிதி அமைச்சர் பேசுவார்? அப்படியானால் நாங்களும் சொல்வோமே.. தமிழ்நாட்டு மக்களே மத்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டாம்.. நமது வரிப் பணத்தை பிற மாநிலங்களுக்கு அள்ளி தருகிறது மத்திய அரசு.. இப்படி சொன்னால் சரியானதாக இருக்குமா? நிர்மலா சீதாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ராஜ்யசபா எம்பிதானே.. அப்படித்தான் பேசுவார்.
தமிழ்நாடு- பீகார் வெள்ளம்: தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக இரண்டு வெள்ளங்களால் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழ்நாடு முதல்வர் மத்திய அரசிடம் ரூ.37,000 கோடி நிதி உதவி கேட்டார். ஆனால் மத்திய அரசு கொடுத்தது எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.276 கோடிதான். இப்போது பீகாரில் வரப்போகும் வெள்ளத்தைத் தடுக்க ரூ.11,000 கோடியை ஒதுக்குகிறதாம் மத்திய அரசு. தற்போதைய மைனாரிட்டி மத்திய அரசுக்கு கூட்டணி ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி இருப்பதால் பீகாருக்கு நிதி உதவியை வாரி வழங்குகிறது. இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.












Click it and Unblock the Notifications