மிடில் கிளாஸ் மக்களே ரெடியா! இனி தங்க நகை வாங்குவது ஈஸி..பட்ஜெட்டில் காத்திருக்கும் மேஜர் அறிவிப்பு?
டெல்லி: இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதனால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் தங்கத்தை வாங்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கத்தை மிடில் கிளாஸ் மக்கள் வாங்க உதவுவது தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதை மத்திய அரசு அமல்படுத்தினால் சிக்கலே இல்லாமல் மிடில் கிளாஸ் மக்களால் தங்க நகைகளை வாங்க முடியும்.
நமது நாட்டின் மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையும் பெற்று, அதற்கேற்ப மத்திய அரசு பட்ஜெட்டை தயார் செய்து வருகிறது. இதற்கிடையே தங்க நகை விற்பனையாளர்கள் தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
தங்கம் விலை:
இப்போது தங்கம் விலை உச்சத்திற்குப் போய்க் கொண்டு இருக்கிறது. இப்போது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ 7510-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை தாண்டிவிட்டது. மேலும், தங்கத்திற்கு 3 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டி இருக்கிறது. இது தவிர நகையாக வாங்கும் போது செய்கூலி, சேதாரம் என பல விஷயங்கள் உள்ளன.
மேஜர் திட்டம்:
தங்கம் விலை இந்தளவுக்கு உச்சத்தில் இருப்பதால் ஏழைகள் மட்டுமின்றி மிடில் கிளாஸ் மக்களாலும் கூட தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நடுத்தர வர்க்கத்தினரும் தங்கத்தை வாங்க ஏதுவாக இஎம்ஐ மூலம் தங்க நகைகளை வாங்க அனுமதிக்க வேண்டும் என நகை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தங்க நடிகை செய்வோரின் திறன் மேம்பாட்டிற்காகவும் தனியாக நிதி ஒதுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்போது தங்கம் விற்பனையைச் செபி, ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், நிதி அமைச்சகம், வர்த்தக அமைச்சகம் என பல்வேறு அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு விஷயத்தைச் செய்யவும் பல்வேறு அமைப்புகள் விண்ணப்பிக்க வேண்டி உள்ளது. அதை எளிமைப்படுத்த ஒரே ரெகுலேட்டர் வேண்டும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் விரும்புகிறார்கள். தங்கச் சந்தையை எளிமைப்படுத்தும் விதமாக அனைத்து பிராசஸ்களையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க வேண்டும் என நகை விற்பனையாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
கோரிக்கை:
கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தைச் சுத்திகரிக்கும் நிறுவனங்களுக்கு 0.65% மட்டுமே லாபம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. தங்க டோர் (தூய்மையற்ற தங்கம்) இறக்குமதி செய்ய அதிக வரி வசூலிக்கப்படுவதே இதற்குக் காரணமாக உள்ளது. தங்க டோர் இறக்குமதி வரியைக் குறைத்தால் லாபம் அதிகரிக்கும் என்பதால் மத்திய அரசு இதைச் செய்ய வேண்டும் என இந்திய புல்லியன் & ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிருத்விராஜ் கோத்தாரி வலியுறுத்தியுள்ளார்.
தங்க நகை விற்பனையாளர்கள்
இது தொடர்பாக சென்கோ கோல்டு அண்ட் டயமண்ட்ஸ் தலைவர் சுவாங்கர் சென் கூறுகையில், "நகைத் தொழில் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. வரும் காலங்களிலும் இது அதிகரிக்கவே செய்யும். அவர்களின் திறனை மேம்படுத்த மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும், நடுத்தர வர்க்க மக்கள் இஎம்ஐ மூலம் நகைகளை வாங்குவதற்கு ஒரு வழிமுறையைத் தயார் செய்வோம். இது மிடில் கிளாஸ் மக்களுக்குப் பெரியளவில் உதவும். இது மட்டுமின்றி வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications