"மழையே குறைவாக பெய்யும்போது காவிரி நீரை திறக்க எப்படி உத்தரவிட முடியும்?” உச்ச நீதிமன்றம் கேள்வி!
டெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மழைப்பொழிவு குறைவாக இருக்கும் சூழலில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கர்நாடகா, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய நீரை வழங்கவில்லை என்றும், நிலுவையில் உள்ள 11 டிஎம்சி தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு வாதிட்டது. ஆனால், மழைப்பொழிவு குறைவாக இருக்கும்போது நீரை வழங்குமாறு எவ்வாறு உத்தரவிட முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவிரி
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்தி, தமிழகத்துக்கு கர்நாடகா உரிய தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதே தமிழக அரசின் மனுவின் முக்கிய கோரிக்கையாகும்.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிட்டார். குறைவான மழைப்பொழிவு காரணமாக தமிழகத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், காவிரியிலும் கர்நாடகா உரிய நீரை திறந்துவிடவில்லை எனவும் ரோஹத்கி வாதிட்டார். இதனால் ஜூலை மாதம் முதல் தற்போது வரை கணக்கிட்டால் 11 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உரிய முறையில் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு
அவர் மேலும், "எங்களுக்கு இப்போது தான் தண்ணீர் தேவைப்படுகிறது. பயிர்களுக்கு நீர் தேவைப்படும் நேரத்தில் அதை வழங்க வேண்டும். பற்றாக்குறை இருப்பதாக கூறி தண்ணீர் தர மறுக்க முடியாது" என்பதே தமிழக அரசின் வாதமாக இருந்தது. வழக்கமான ஆண்டில் பிலிகுண்டுலுவில் தமிழகத்துக்கு 177 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டும் என்றும், தற்போதைய பற்றாக்குறையை கணக்கிட்டால் 11 டிஎம்சி நீர் நிலுவையில் இருப்பதாகவும் ரோஹத்கி குறிப்பிட்டார். தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் வறட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் வாதிட்டார்.
எப்படி உத்தரவிட முடியும்?
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீர்வரத்து மற்றும் பற்றாக்குறை நிலவரங்களைக் கருத்தில் கொண்டே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டனர். மேலும், மழைப்பொழிவு குறைவாக இருக்கும் சூழலில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வறட்சி காலத்தில் நீரை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் போன்ற நிபுணத்துவ அமைப்புகளே முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
கேரளா
இந்த வழக்கில் கேரள அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் வாதிட்டார். இந்த ஆண்டு கேரளாவின் பல மாவட்டங்களில் வறட்சி சூழல் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், குடிநீரை பாதுகாப்பதற்காக ஆண்டு முழுவதும் நீரை சேமித்து வைப்பதும் அவசியம் என்றார். தமிழகத்துக்கு வடகிழக்குப் பருவமழை மூலம் நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், எல் நினோ காரணமாக மழை அளவில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு நீர் மேலாண்மை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டார்.
விசாரணையின்போது, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு பிரச்சினை ஏற்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். அப்போது கேரள அரசு தரப்பு, நிபுணத்துவம் வாய்ந்த மேலாண்மை அமைப்பு இருக்கும்போது, அதன் முடிவுகளில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டது.




Click it and Unblock the Notifications
