"ரைட்டு.." பாலுறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது குறைக்கப்படுகிறதா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
டெல்லி: ஒருமித்த வகையில் இருபாலரும் உறவுகொள்ள 18 வயது அடிப்படை என்று இருக்கும் நிலையில் இதனை குறைக்க எந்த யோசனையும் இல்லையென்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருபாலர்கள் உறவு வைத்துக்கொள்ள தற்போது 18 வயது என்பது அடிப்படையாக இருக்கிறது. இதற்கு கீழ் இவ்வாறு உறவு வைத்துக்கொள்பவர்கள் போக்சோ சட்டத்தின் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள்.
ஆனால், மேலை நாடுகளில் இதற்கான குறைந்தபட்ச வயது 16ஆக இருக்கிறது. எனவே மாறி வரும் சூழலுக்கு ஏற்ப இந்தியாவிலும் இது போன்று வயது குறைப்பை செய்ய வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்தன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
குறிப்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இது குறித்து பேசுகையில், "ஒருமித்த கருத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயது என்பது 2012க்கு முன்னர் 16ஆக இருந்தது. ஆனால் இது 2012ம் ஆண்டு இயற்றப்பட்ட போக்சோ சட்டத்திற்கு அடுத்து 18 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. ஆக 18 வயதுக்குள் ஒருமித்த கருத்துடன் பாலுறவில் ஈடுபட்டாலும் அது போக்சோ குற்றமாகும். இது போன்ற வழக்குகள் நீதிபதிகளுக்கு சவாலாக இருக்கின்றன. எனவே இந்த விவகாரங்களில் சட்ட சீர்திருத்தம் அவசியமாகிறது என உயர்நீதிமன்றங்கள் பல வலியுறுத்தியுள்ளன. பெரும்பாலான போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 16-18 வயது வரையில்தான் இருக்கிறார்கள். இந்த வயது சுய பாலியல் தேர்வுக்கு ஏற்ற வயதா? என்பதை தீர்மானிக்க நம்மிடம் முறையான சட்ட வரையறை கிடையாது.

ஏன் குறைக்க வேண்டும்?
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளை ஆய்வு செய்ததில் பாலுறவை சம்மதிக்கும் வயது குறித்த குழப்பத்தால் 94% வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகிவிடுகிறார்கள். மறுபுறம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பெறப்படுவதில்லை. சென்னை உயர்நீதிமன்றம் 16 வயதுக்கும் குறைவாக உள்ளவர்கள் பாதிக்கப்படும்போது இந்த சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ஆக, பாலுறவை சுயமாக தேர்ந்தெடுக்கும் வயது எது? என்பது சட்டரீதியாக வரையறை செய்ய வேண்டிய அவசியம் மேலெழுந்திருக்கிறது. மட்டுமல்லாது இது அவசரமானதும் கூட. எனவே ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்தின் மூலம் இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

யோசனை இல்லை
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "போக்சோ சட்டம் 18 வயதிற்கு உட்பட்டவர்களை சிறார்கள் என்று வரையறுக்கிறது. இவர்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கவே இக்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று 2019ம் ஆண்டு இச்சட்டம் திருத்தப்பட்டது. எனவே இந்த வயது குறைப்பு குறித்த எந்த யோசனையும் மத்திய அரசிடம் இல்லை" என்று கூறியுள்ளார்.

குழந்தை திருமணங்கள்
மத்திய அரசு கடந்த 2012ம் ஆண்டு ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பை அதிகரித்ததற்கான காரணம் பாலியல் பலாத்கார குற்றங்களை குறைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இவ்வாறு வயது குறைக்கப்பட்ட 10 ஆண்டுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துதான் வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல 18 வயதுக்கு குறைவாக உள்ள சிறார்களின் திருமணங்கள் குறித்த வழக்குகளும் அதிகரித்துதான் வந்திருக்கிறது என அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். அதாவது 2019ம் ஆண்டில், 523குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2020ம் ஆண்டு 785 ஆகவும், 2021ம் ஆண்டு 1050ஆகவும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications