அவ்வளவு சொல்லியும் கேட்காத பாஜக! கடைசியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மத்திய அரசு!
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த மெட்ரோ நிலையங்களை மூடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு மீறியிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு இன்று நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறது.
SIR விஷயத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பு டெல்லியில் போராட்டத்தை நடத்தியது.

இந்த போராட்டம் தனக்கு எதிரானதாக மாறிவிடக்கூடாது என்பதால், இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக டெல்லி முழுவதும் சுமார் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதன் மூலம் ஜந்தர் மந்தர் பகுதிக்கு போராட்டக்காரர்கள் வருவது தடுக்கப்படும் என்று மத்திய அரசு கணக்கு போட்டது. இந்த கணக்கில்தான் தீயை வைத்தது உச்சநீதிமன்றம்.
போராட்டக்காரர்களை தடுக்க வேண்டும் என்கிற நோக்கம் ஓகேதான். ஆனால், மெட்ரோ நிலையங்களை மூடுவதன் மூலம் பொதுமக்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொள்வார்களே! என்று கேள்வி எழுப்பி.. மெட்ரோ ரயில் நிலையங்களை மூடக்கூடாது என்று உத்தரவிட்டது. இப்படி உத்தரவு வந்த பிறகும் கூட.. மத்திய அரசு அதை ஏற்கவில்லை.
அக்.9ம் தேதி உத்தரவு வந்தது.. அக்.10ம் தேதி அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் முழுமையாக மூடப்பட்டன. இது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த மோகன், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்தார். மேலும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரினார்.
நீதிமன்ற பணிகளுக்கு எவ்வித இடையூறும் இருக்க கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகளை நீக்கி உத்தரவிட்டது. அதேபோல இன்று நடைபெற்ற விசாரணையின்போது, போராட்டத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக பல்வேறு வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
எனவே போராட்டம் தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பத்திரமாக பாதுகாத்து சமர்ப்பிக்குமாறு அனைத்து சட்டம் ஒழுங்கு முகமைகளுக்கும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதேபோல ஜந்தர் மந்தர் பகுதி, போராட்ட இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. தொழில்நுட்ப காலத்திலும் மக்கள் தங்களின் குரலை தகுந்த இடத்தில் பதிவு செய்வதற்கான அடிப்படை உரிமை உள்ளதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.


Click it and Unblock the Notifications
