அடுத்தடுத்து பண்டிகை.. இந்த 3 மாதங்கள் மிக கவனமாக இருக்கணும்.. மத்திய அரசு வார்னிங்!
டெல்லி: அடுத்தடுத்து பண்டிகை வருவதால் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என்று நாடு படாதபாடு பட்டது.
இதன்பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. தற்போது இந்தியாவில் கொரோனா குறைந்து விட்ட போதிலும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கேரளா உள்ளிட்ட சில மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

குறைந்த கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 22,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 24,624 பேர் மீண்டுள்ளனர். 315 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் ஒரு கட்டத்தில் 3,00,000-க்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது 22,000-க்கு வந்து விட்டது மகிழ்ச்சி என்றாலும் இந்தியா இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பண்டிகைகள்
ஏனென்றால் இந்தியாவில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை என்று அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருக்கின்றன. இதில் கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால், கொரோனா மீண்டும் இந்தியாவின் உச்சந்தலையில் ஏறக்கூடிய அபாயம் உள்ளது. இந்த நிலையில் ஒரு நாளைக்கு 4.5 முதல் 5 லட்சம் கோவிட் வழக்குகள் அதிகரித்தாலும் அதனை சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

சமாளிக்க தயார்
இது தொடர்பாக நிதி ஆயோக் தலைவர் டாக்டர் வி.கே.பால் கூறுகையில், 'நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் முதல் 5 லட்சம் கொரோனா கேஸ்கள் ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க அரசு தயாராக உள்ளது. சுமார் 71% மக்கள் தடுப்பூசியை போட்டு விட்ட இந்த நேரத்தில் கொரோனா உச்சம் எந்த அளவுக்கு இருக்கும் கணிக்க முடியாது, ஆனாலும் கொரோனா உச்சம் கொண்டால் அதனை சமாளிக்க மருத்துவ கட்டமைப்புகள் உள்ளது' என்று கூறினார்.

தடுப்பூசி
மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், ' இந்தியாவின் 34 மாவட்டங்கள் வாராந்திர கொரோனா நேர்மறை விகிதம்(பாசிட்டிவ் ரேட்) 10%-க்கு மேல் உள்ளன. அடுத்தடுத்து பண்டிகை வருவதால் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்த 3 மாதங்கள் மிக முக்கியமானதாகும். பண்டிகைகளில் கட்டுப்பாடுகள் மிக முக்கியம். தீபாவளி போன்ற பண்டிகை நாளன்று உங்கள் அன்புக்குரியவர்களை ஆன்லைனில் சந்தியுங்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்க் மிக அவசியம். அதனை கடைபிடியுங்கள். இதேபோல் தடுப்பூசி வைரஸை தடுக்கும் ஒரு கவசம். இந்தியாவில் லட்சத்தீவு, சண்டிகர், கோவா, இமாச்சலப் பிரதேசம், அந்தமான் & நிக்கோபார் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 100% தடுப்பூசி முதல் டோஸ் மூலம் போடப்பட்டுள்ளன' என்று லாவ் அகர்வால் கூறினார்.












Click it and Unblock the Notifications