விவசாயிகள் போராட்டம்... அமைதியாக முடிந்த சாலை மறியல்... ஹைலைட்ஸ் என்ன
டெல்லி : விவசாயிகள் நடத்திய 3 மணிநேர சாலை மறியல் போராட்டம், எங்கும், எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இந்த போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி இதில் பார்க்கலாம்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் இன்று நாடு முழுவது 3 மணி நேர (பகல் 12 மணி முதல் 3 மணி வரை) சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். முக்கிய சாலைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடி போராட்டம் நடத்தினர்.

முக்கிய நிகழ்வுகள் இதோ :
1. சக்கர் ஜாம் என பெயரிடப்பட்ட சாலை மறியல் போராட்டம் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி, பல விவசாயிகளை டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி பல நெடுஞ்சாலைகளை மறித்தனர்.
2. ராஜஸ்தானில் கங்காநகர், ஹனுமன்கர், தோல்புர், ஜலாவர் உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைகள், முக்கிய சாலைகள் விவசாயிகளால் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
3. பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், டெல்லியின் எல்லைப் பகுதிகளில் நடக்கும் போராட்டம் அக்டோபர் 2 வரை தொடரும். ஒவ்வொரு கிராமங்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட உள்ளோம் என்றார்.
''சோறுபோடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா""... கங்கனா ரனாவத் உருவப்படத்தை எரித்து பெண்கள் போராட்டம்!
4. இந்த போராட்டத்தின் போது எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. டெல்லியில் சுமார் 50 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகாவிலும் சாலைகளை மறித்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. சாலை மறியல் போராட்டம் காரணமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சிங்கு, காசிபூர், திக்ரி பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
6. டெல்லியில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. சில மெட்ரோ நிலையங்களில் வெளியே செல்லும் வழி சில மணி நேரங்கள் மூடப்பட்டது. சட்ட ஒழங்கை பாதுகாக்க கிட்டதட்ட 50,000 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
7. சம்யுக்த் கிசான் அமைப்பின் சார்பிலும் டெல்லி, உத்திர பிரதேசம்,உத்திரகாண்ட் தவிர்த்த பிற பகுதிகளில் நெடுஞ்சாலைகள், முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டன.
8. சிலர் அமைதியை சிதைத்து, வன்முறையை ஏற்படுத்த முயற்சித்ததால் உபி., உத்திரகாண்ட் பகதிகளில் சாலை மறியல் நடத்த வேண்டாம் என முடிவு செய்ததாக ராகேஷ் திகைத் தெரிவித்தார்.
9. சில மாநிலங்களில் விவசாய சங்கத்தினருடன் இணைந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாஷ்டிராவில் மூத்த காங்கிரஸ் தலைவர் பிருத்விரான் சவ்கானின் மனைவி சத்வஷீலா சவ்கான் உள்ளிட்ட 40 போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளை மறிக்க முயன்றதால் கைது செய்யப்பட்டனர்.
10. தெலுங்கானாவில் விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் பல விவசாய சங்கத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.