குஜராத் தேர்தலிலும் காங்கிரசுக்கு படுதோல்வி காத்திருக்கிறது.. பிரசாந்த் கிஷோர் பரபர கணிப்பு
டெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நடந்த சிந்தனையாளர் மாநாடு அர்த்தமுள்ள விஷயங்கள் பற்றி பேசி சாதிப்பதில் தோல்வியடைந்துள்ளது என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்துள்ளார்.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் ஆலோசனை வழங்கினார். 2024 பொதுத்தேர்தல் மற்றும் குஜராத், இமாச்சல் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக சில விஷயங்களை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியிடம், பிரசாந்த் கிஷோர் எடுத்து கூறினார்.
இவரது ஆலோசனைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அறிக்கைகள் தயார் செய்தனர். இதற்கிடையே பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும், இதுதொடர்பாக இருதரப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

காங்கிரஸில் சேராத பிரசாந்த் கிஷோர்
இதுதொடர்பான விவாதங்கள் எழுந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்ததாக அதன் தேசிய செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறினார். மேலும், பிரசாந்த் கிஷோரும் அதனை தெரிவித்தார். கட்சியில் அதிகாரம் படைத்த பதவியை பிரசாந்த் கிஷோர் கேட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதும் தான் காங்கிரஸோடு அவர் கைகோர்க்கவில்லை என கூறப்படுகிறது.

பாதயாத்திரை அறிவிப்பு
இதற்கிடையே அடுத்த சில நாட்களில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர் தான் 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் அக்டோபர் 2ம் தேதி முதல் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பீகாரில் பாதயாத்திரை நடத்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார். இதன்மூலம் அவர் தனது சொந்தமாநிலத்தில் இருந்து அரசியல் பிரவேசம் செய்யவும், விரைவில் கட்சி துவங்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் மாநாடு
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை மீட்டெடுப்பது, தேர்தல் அரசியலில் கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வது, 2024 மக்களவை தேர்தல், குஜராத், இமாச்சல் பிரதேசம், கர்நாடகம் சட்டசபை தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தனையாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது. மே 13 முதல் மே 15 வரை ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த இந்த மாநாட்டுக்கு சோனியாகாந்தி தலைமை வகித்தார். ராகுல்காந்தி உள்பட இந்தியாவின் அனைத்து மாநில தலைவர்களும் பங்கேற்றனர்.

மாநாட்டு முடிவுகள்
இந்த மாநாட்டில் ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி முடிவெடுக்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கான ஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கான ஒதுக்கீட்டில் மாற்றம் செய்வது பற்றியம், இந்துத்துவ கொள்கையில் மென்மை போக்கை கடைப்பிடிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர் கருத்து
இந்த மாநாடு குறித்து தற்போது தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ உதய்ப்பூர் சிந்தனையாளர் மாநாடு குறித்து என்னிடம் தொடர்ந்து கருத்துகள் கேட்கப்படுகிறது. எனது பார்வையில் இந்த மாநாடு அர்த்தமுள்ளவற்றை விவாதிப்பதில் தோல்வியடைந்துள்ளது. இதனால் பழைய நிலையே தொடர்கிறது. எனவே குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல் தோல்வி வரையாவது காங்கிரஸ் தலைமைக்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் விரைவில் நடைபெற உள்ள குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் என்பதை பிரசாந்த் கிஷோர் வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications