நூலகத்தில் மண்டை உடைப்பு.. மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு.. கலவரமான ஜாமியா மிலியா பல்கலைக்கழகம்
டெல்லி: ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்களிடையே மோதல் சம்பங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு மாணவர்களிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் சிறந்த பல்கலைக்கழகத்தின் தர வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

144 தடை உத்தரவு
நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஜேன்யு-க்கு அடுத்து ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகம்தான் இருக்கிறது. அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கும், மாணவர் விரோத கொள்கைகளுக்கும் உடனடியாக எதிர்வினையாற்றும் பல்கலைக்கழகம் இது. இவ்வாறு இருக்கையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர், பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் ஓக்லா பகுதியில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

சண்டை
பொது அமைதியை குலைக்க சிலர் முயற்சிப்பதாகவும் எனவே இந்த பகுதியில் காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது. இவ்வாறு இருக்கையில் நேற்றிரவு பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, நேற்று பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் இரண்டு பிரிவினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்துள்ளது. இதனையடுத்து காயமடைந்த மாணவர்கள் ஜாமியா நகரில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு
இந்நிலையில் ஹரியானாவை சேர்ந்த மாணவர்கள் சிலர் அடிப்பட்ட மாணவனை பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது நலம் விசாரித்துக்கொண்டிருக்கையில், சிகிச்சை பெற்று வந்த நவுமன் அலி எனும் மாணவன் மீது அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அலறியுள்ளனர். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்த மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

வாக்குமூலம்
மற்றபடி வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து காயமடைந்த நவுமன் அலி எனும் மாணவன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் புலனாய்வு அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியில் மருத்துவமனைக்கு உள்ளேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications