'சீரம் நிறுவனத்தின் நலன்களுக்காக.. இந்தியர்களை ஆபத்தில் தள்ளும் மத்திய அரசு..' ப சிதம்பரம் அட்டாக்
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்களிந் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், பூஸ்டர் டோஸ் தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முக்கிய கருத்தை வலியுறுத்தியுள்ளார்,
உலகெங்கும் கடந்த சில மாதங்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்தச் சூழலில் கடந்த நவ. மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய கொரோனா நிலைமையை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

ஓமிக்ரான் கேஸ்கள்
ஓமிக்ரான் கொரோனா டெல்டாவை விடக் குறைந்தபட்சம் 3 மடங்கு வரை வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் முதற்கட்ட தகவல்களைத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஓமிக்ரான் எந்தளவுக்குத் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்த தகவல்கள் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் பூஸ்டர் டோஸ்கள் மூலம் ஓமிக்ரான் கேஸ்களை கட்டுப்படுத்த முடிவதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிராந்திய தலைவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ப. சிதம்பரம்
இந்தச் சூழலில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் பூஸ்டர் டோஸ்களை செலுத்தத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பூஸ்டர் டோஸ்களை இன்றியமையாதவை எனக் கூற போதுமான ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன. கோவிஷீல்டு தடுப்பாற்றல் 3 மாதங்கள் வரை மட்டுமே உள்ளதாக லான்செட் ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நாம் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூஸ்டர் டோஸுக்கான நேரம்
பூஸ்டர் டோஸ்களை அனுமதிக்க வேண்டிய நேரம் இது. ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற அங்கீகரிக்கப்பட்ட பிற தடுப்பூசிகளைப் பயன்படுத்த வேண்டிய நேரமும் வந்துவிட்டது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தடுப்பூசி போட்ட கோடிக்கணக்கான இந்தியர்களை அரசு தொற்றுநோய்க்கு ஏற்படும் சூழலுக்குத் தள்ளுகிறது.

அரசு மட்டுமே பொறுப்பு
மூன்றாவது அலை ஏற்பட்டு, அதில் அதிக எண்ணிக்கையில் வேக்சின் போட்ட இந்தியர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அரசு மட்டுமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக காங்கிரசின் ராகுல் காந்தியும் பூஸ்டர் டோஸ் குறித்து அரசு முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். உலகில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் பல்வேறு நாடுகளிலும் பூஸ்டர் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications