சீனா ஆக்கிரமிப்பு- ராணுவம் மீதான விமர்சனம்: ராகுல் காந்தி ஆஜராக சம்மன் அனுப்பியது லக்னோ நீதிமன்றம்!
டெல்லி: நாட்டின் ராணுவத்தினரை விமர்சித்து கருத்து தெரிவித்ததற்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 24-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றம் அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது.
2022-ம் ஆண்டு ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடைபயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது 2022-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, நாட்டின் எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது; அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்துகிறது என்பது உள்ளிட்ட கருத்துகளைத் தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துகளுக்கு அப்போதே ராணுவத் தரப்பில் விளக்கமும் தரப்பட்டது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எம்பி -எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பான பிஆர்ஓவின் முன்னாள் இயக்குநர் சங்கர் ஶ்ரீவத்சவா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். அதில், ராகுல் காந்தியின் விமர்சனம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.
ராகுல் காந்திக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த லக்னோ நீதிமன்றம், மார்ச் மாதம் 24-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications