அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 47,092 பேர் பாதிப்பு - மூன்றாவது அலை வரும் முன் கவனம் தேவை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,092 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி: கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில் கடந்த வாரங்களில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 47,092 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மூன்றாம் அலை உச்சத்தை அடையும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அதற்கு ஏற்றாற்போலவே இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஓரே நாளில் கொரோனாவால் 47,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,28,57,937 பேராக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 30,941, நேற்று 41,965 என பதிவான நிலையில், இன்று 47,092 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 35,181 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,20,28,825 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.53 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 509 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் 4,39,529 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,89,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.15% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 66,30,37,334 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் சூழலில் திடீரென பாதிப்பு அதிகரிப்பது சுகாதாரத்துறையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பாதிப்பு அதிகமாக இல்லாத மாநிலங்களில் தற்போது அதிகரிப்பது மூன்றாவது அலைக்கான தொடக்கமாக இருக்கலாம் என்று ஐசிஎம்ஆரைச் சேர்ந்த மருத்துவர் சமீரன் கூறியுள்ளார். மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பரவலை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் மேலும் தாமதிக்காமல் உடனே போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட, போடாத அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் உருமாறிய வடிவங்கள் வேகமாக அடுத்த அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மேலும் ஒரு புதிய வைரஸ் பரவல் மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது. பண்டிகை கொண்டாட்டங்களால் ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. கேரளாவில்
இதனை தவிர்க்கும் வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் தொடர்பாக சில அறிவுறுத்தல்களையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு இந்த அளவுக்கு அதிகரிக்க ஒணம் பண்டிகை முக்கிய காரணமாக மாறியிருக்கிறது. எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மாநில சுகாதாரத்துறையினரும் கவலை தெரிவித்துள்ளனர். அங்கு கடந்த 5 நாட்களில் மட்டும் புதிதாக ஒன்றரை லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் தொற்று விகிதம் 20 சதவிகிதக்கும் மேல் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே தனிமையில் இருக்கும் நிலையில், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது. அதில் ஒரு சில மாநிலங்களிள் உள்ளூர் பரவலை தவிர்த்து தேசிய அளவில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது,
கட்டுப்பாடுகள் மட்டுமன்றி கேரள எல்லையையொட்டிய தமிழக, கர்நாடக மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இவற்றை கட்டாயமாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாநிலத்தில் 2 வாரங்களுக்குள் தொற்று கட்டுக்குள் வரும் என நிபுணர்களும் கூறியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதங்களில் பண்டிகைக்காலம் வர உள்ளது. மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் வர உள்ளதால் பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications