12 - 14 வயது சிறுவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி... பதிவு செய்வது எப்படி தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் நாளை (புதன்கிழமை) முதல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ள ரிஜிஸ்டர் செய்து பயன்பெறுவது குறித்து மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இவர்கள் நாளை முதல் ‛கோர்பேவேக்ஸ்' எனும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம். இந்த தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பயோலாஜிக்கல் இ எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மான்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் , ‛குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால் நாடும் பாதுகாப்பாக இருக்கும். மார்ச் 16 முதல் 12 முதல் 13, 13 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியாக கூறி கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

யாருக்கெல்லாம் தடுப்பூசி
இதன்மூலம் 2008, 2009, 2010ம் ஆண்டில் பிறந்தவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியும். இந்தியாவில் 7.11 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி முதற்கட்டமாக 5 கோடி ‛கோர்பேவேக்ஸ்' கொரோனா தடுப்பூசி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ள விரும்பும் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும். இதுகுறித்தும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்பதிவு எப்படி
அதன்படி www.cowin.gov.in இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அதன்பிறகு Register/sign in என்பதை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் அதை பயன்படுத்தி நுழையலாம். இல்லாவிட்டால் புதிதாக அக்கவுண்ட் திறக்க வேண்டும். அதன்பிறகு ஆதார், பான் கார்டு உள்ளிட்ட சில விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது இல்லாவிட்டால் மாணவர்களின் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்து பயன்பெறலாம்.

பூஸ்டர் தடுப்பூசி
இதுதவிர 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முதியவர்கள் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதன் அடிப்படையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம். இவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அனுமதிப்பது என்பது கோவின் இணையதள விவரங்கள் அடிப்படையில் தான் இருக்கும். இவர்களும் www.cowin.gov.in இணையதளத்தில் ஆதார் எண், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் செல்போன் எண்ணுக்கு OTP அனுப்பி சரிபார்ப்பு செய்யப்படும். அதன்பிறகு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான உங்கள் இருப்பிடம், பின்கோடு போன்றவற்றை உள்ளீடு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications