Mayor: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல்: கேரளாவில் பிறந்த நித்யா ராமன் படைக்கப் போகும் புதிய வரலாறு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் இப்போது ஒரு இந்தியப் பெண்ணின் பெயர் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
கேரளாவில் பிறந்து, இன்று அமெரிக்க அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக வளர்ந்துள்ள நித்யா ராமன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் பதவிக்கான இறுதிப் போட்டியில் (Runoff) நுழைந்து சாதனை படைத்துள்ளார்.

யார் இந்த நித்யா ராமன்?
கேரளாவில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த நித்யா ராமன், தனது ஆறாவது வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர், உலகின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும், எம்.ஐ.டி (MIT) நிறுவனத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே சமூக சேவையில் ஆர்வம் காட்டிய நித்யா, சென்னைக்கு வந்து 'டிரான்ஸ்பரன்ட் சென்னை' (Transparent Chennai) என்ற அமைப்பைத் தொடங்கினார்.
இதன் மூலம் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நகர்ப்புறப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உழைத்தார். பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர், 2020-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
கடும் போட்டி
தற்போது நடைபெற்று வரும் மேயர் தேர்தலில், தற்போதைய மேயர் கரேன் பாஸை எதிர்த்து நித்யா ராமன் களம் காண்கிறார். ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும், தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஸ்பென்சர் பிராட்டைப் பின்னுக்குத் தள்ளி நித்யா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் கரேன் பாஸுடன் அவர் நேரடியாக மோதவுள்ளார்.
முக்கியப் பிரச்சனைகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் தற்போது வீடற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு, கட்டுப்படியாகாத வீட்டு வாடகை மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புகள் எனப் பல சவால்களைச் சந்தித்து வருகிறது.
"இப்போதுள்ள திட்டங்கள் எதுவும் சரியாகச் செயல்படவில்லை. வீடற்றவர்களை ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவிற்கு மாற்றுவது வெறும் அரசியல் நாடகம்" என்று நித்யா ராமன் துணிச்சலாகக் குற்றம் சாட்டுகிறார்.
2028 ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நகரின் அடிப்படைப் பிரச்சனைகளைச் சரிசெய்வதே தனது இலக்கு என அவர் கூறுகிறார்.
மாற்றத்தை விரும்பும் மக்கள்
தற்போதைய மேயர் கரேன் பாஸ் மீது மக்களுக்குச் சில அதிருப்திகள் நிலவுகின்றன. குறிப்பாக, நகரில் காட்டுத்தீ பரவியபோது அவர் வெளிநாட்டில் இருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்தச் சூழலில், நித்யா ராமனின் 'முற்போக்குச் சிந்தனைகள்' இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
வருகிற நவம்பர் தேர்தலில் நித்யா ராமன் வெற்றி பெற்றால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயராகப் பொறுப்பேற்கும் முதல் தெற்காசியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைப்பார். கேரளாவிலிருந்து கலிபோர்னியா வரை நீண்டிருக்கும் அவரது இந்தப் பயணம், உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்குப் பெருமிதம் அளிப்பதாக உள்ளது.












Click it and Unblock the Notifications