டெல்லி எல்லைகளில் டிரோன்களில் பல நூறு கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு- தடைகளை உடைக்கும் விவசாயிகள்!
டெல்லி: டெல்லிக்குள் போராட வரும் விவசாயிகளை பஞ்சாப்- ஹரியானா எல்லையிலேயே போலீசாரும் ராணுவமும் தடுத்து வருகின்றனர். டெல்லி நோக்கி விவசாயிகள் முன்னேறுவதைத் தடுக்க டிரோன்களில் 100க்கும் மேற்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020-21-ம் ஆண்டு உலகை உலுக்கும் வகையில் ஓராண்டு காலம் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை மத்திய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது மத்திய அரசு. மேலும் பிரதமர் மோடியும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார்.

தற்போது மீண்டும் விவசாயிகள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். 2020-21 போராட்டத்தின் முடிவில் தங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. மேலும் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். 2021 போராட்டத்தின் போது லக்கிம்பூரில் 8 விவசாயிகளை படுகொலை செய்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ10,000 ஓய்வூதியம் தர வேண்டும்; 2020-21 போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்பதுதான் டெல்லியை நோக்கி போராட வரும் விவசாயிகளின் கோரிக்கை.

டெல்லியை நோக்கி பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் 6 மாதங்களுக்கு தேவையான உணவு, எரிபொருட்கள், அத்தியாவசிய பொருட்களுடன் விவசாயிகள் புறப்பட்டனர். டெல்லி- அம்பாலா சாலையில் பஞ்சாப் - ஹரியானா எல்லையான சம்புவில் போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். போலீசாருடன் துணை ராணுவப் படையினரும் இணைந்து கொண்டனர்.

விவசாயிகள் மீது டிரோன்கள் மூலமாக 100க்கும் மேற்பட்ட கண்ணீர் புகை குண்டுகள் சராமரியாக வீசப்பட்டன. அதேபோல தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை கலைந்து போக செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால் இவை எதற்கும் விவசாயிகள் அஞ்சவில்லை. போலீசாரின் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட படியே சம்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புகளை டிராக்டர்களில் சங்கிலி கட்டி இழுத்து சென்று தூக்கி எறிந்தனர். சம்பு பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளை உடைத்து எறிந்து தூக்கி பாலத்தின் கீழே வீசி எறிந்தனர்.

விவசாயிகளின் உக்கிர போராட்ட காலத்தால் டெல்லி எல்லைகள் பெரும் போர்க்களமாகி இருக்கிறது. ஹரியானாவின் குருஷேத்ராவிலும் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் தடைகளை உடைத்து எறிந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி திரண்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த டெல்லி படையெடுப்பை மத்திய அரசு இதுவரை இல்லாத வகையில் கடுமையாக ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சாலைகளில் ஆணிகளை அமைத்து தடுப்பது, பாதுகாப்பு தரப்பினருக்கு புதுவகையான ஆணி ஆயுதங்களைக் கொடுப்பது உள்ளிட்டவைகள் வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.













Click it and Unblock the Notifications