அதிர்ச்சி... டெல்லியில் 26 சதவீதம் அதிகரித்த கொரோனா... தலைநகர் வழியே தலை தூக்குகிறதா கோவிட்?
டெல்லி: டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 461 பேர் பாதிக்கப்பட்டனர். இது முந்தைய நாள் பாதிப்பை ஒப்பிடும்போது 26 சதவீதம் அதிகமாகும். மேலும் நோய் உறுதி செய்யும் சதவீதமும் 5.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா 4ம் அலை உருவாகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவை கொரோனா 3 அலைகளாக தாக்கியுள்ளன. இதில் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கொத்து கொத்தாக மக்கள் பலியாகினர்.
கடந்த சில வாரங்களாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தான் திடீரென்று தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர தொடங்கி உள்ளது.

டெல்லியில் கொரோனா உயர்வு
டெல்லி சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பாதித்த நபர்கள் குறித்த விபரம் இன்று வெளியிடப்பட்டது. அதில் கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 461 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது நேற்றைய பாதிப்பை ஒப்பிடும்போது 26 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தில் நேற்று முன்தினம் நோய் பாதிப்பு சதவீதம் 3.95 ஆக இருந்த நிலைலயில் இது தற்போது 5.33 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பலியும் அதிகரிப்பு
இதன்மூலம் 100 கொரோனா பரிசோதனைகளில் 5 பேர் பாதிக்கப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். கெரோனாவால் பாதிக்கப்பட்ட 1,262 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நேரிடையாக வகுப்புகள் துவங்கப்பட்டன.

கவலைப்பட தேவையில்லை
தனியார் பள்ளி மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் பள்ளி கல்வித்துறைக்கு புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபற்றி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், ‛‛டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கலாம். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் கவலைப்பட தேவையில்லை'' என்றார்.
Recommended Video

4ம் அலைக்கான அச்சாரமா...
இருப்பினும் டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா அருகேயுள்ள நொய்டா மற்றும் காஜியாபாத்திலும் எதிரொலிக்கிறது. இங்கும் சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா 2ம் அலை ஓய்ந்த பிறகு 3ம் அலைக்கு டெல்லி தான் பிள்ளையார் சுழி போட்டது. இதனால் டெல்லியில் பாதிப்பு அதிரித்து வருவது என்பது இந்தியாவின் 4ம் அலைக்கான அச்சாரமாக என அஞ்ச வைக்கிறது.












Click it and Unblock the Notifications