போராட்டக்காரர்கள் ஓரிடத்தில் அதிகநாள் போராட கூடாது! கரப்பான்பூச்சி கட்சியால் உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: ''போராட்டக்காரர்கள் எந்தவொரு இடத்திலும் காலவரையறையின்றி போராட முடிாது. போராட்டங்களுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்ட இடத்திலும் காலஅளவுடன் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்'' என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த 10ம் தேதி போராட்டம் அறிவித்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு வழங்கினர். ஆனால் போலீசார் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை.

இதனால் போலீசார் ஜந்தர் மந்தர் நோக்கி சென்றவர்களை ஆங்காங்கே மறித்து கைது செய்தனர். அதுமட்டுமின்றி இனி டெல்லி ஜந்தர் மந்தரில் யாரும் போராடக்கூடாது. டெல்லி ஜந்தர் மந்தருக்கு பதில் ராம்லீலா மைதானம் உள்பட 3 இடங்களை டெல்லி மாநகராட்சி போராடுவதற்கான இடமாக அறிவித்தது.
இந்நிலையில் தான் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தின்போது போலீசார் அத்துமீறி செயல்பட்டதாகவும், டெல்லி ஜந்தர் மந்தரை மீண்டும் போராட்டக்களமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட டெல்லி ஜந்தர் மந்தர் தொடர்பாக ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, ஜேவி மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம், ''போராட்டக்காரர்கள் எந்தவொரு இடத்திலும் காலவரையறையின்றி போராட முடியாது. போராட்டங்களுக்கான இடம் என்று தனியே ஒதுக்கப்பட்டாலும் கூட கால நிர்ணயத்துடன் தான் போராட வேண்டும்'' என கருத்து தெரிவித்தனர்.



Click it and Unblock the Notifications
