'பண்டிகை காலம்..' பயங்கரவாதிகளின் மாஸ்டர் பிளான்.. ஸ்லீப்பர் செல்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
டெல்லி: வரவிருக்கும் பண்டிகை காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டிருந்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்தியாவில் அடுத்த மாதம் முதல் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி என வரிசையாக பல்வேறு பண்டிகைகள் வரவுள்ளன. பொதுவாகவே இதுபோன்ற காலங்களைக் குறிவைத்துத் தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள்.
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் கூட நவம்பர் மாதம் இறுதியில் தான் நடந்தது குறிப்பிடத்தக்கது

போலீசார் சோதனை
இந்த ஆண்டு நாடு முழுவதும் முக்கிய இடங்களைக் குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்திருந்தது. குறிப்பாக இந்த முறை தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு நிறுவனங்கள் எச்சரித்திருந்தது. இந்த நிறுவனங்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று டெல்லி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

6 பேர் கைது
இதில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுத் திரும்பிய இரண்டு பேர் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பயங்கரவாத சிறப்புச் செல்லின் மூத்த அதிகாரி நீரஜ் தாக்கூர் கூறுகையில், "இன்று காலையில் நடத்தப்பட்ட சோதனையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் கைது செய்யப்பட்டார். அதேபோல உத்தரப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் பயிற்சி
இவர்களைத் தவிர மேலும் இரண்டு பேர் டெல்லியில் பிடிபட்டனர். விசாரணையில் இவர்கள் இருவரும் மஸ்கட் சென்று, அங்கிருந்து படகில் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். பாகிஸ்தானில் 15 நாட்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்குப் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயிற்சி அளித்துள்ளது. துப்பாக்கிகளைக் கையாள்வது, குண்டுகளைத் தயாரிப்பது ஆகியவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு கையேறி குண்டுகள், இரண்டு ஐஇடி குண்டுகள், ஒரு கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து, துப்பாக்கி ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

டெல்லி போலீசார்
இது தொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாகிஸ்தானால் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த குழு IED குண்டுகளை ஏற்பாடு செய்துள்ளது. நிலைமையின் தீவிரத்தன்மை காரணமாக மும்பை, லக்னோ, பிரயாக்ராஜ், ரே-பரேலி மற்றும் பிரதாப்கர் ஆகிய பகுதிகளில் இன்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் உத்தரப் பிரதேசத்தில் நாச வேலையில் ஈடுபட இருந்த ஸ்லீப்பர் செல்களை நாங்கள் கைது செய்துள்ளோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்லீப்பர் செல்
மேலும், இன்று கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இன் ஸ்லீபர் செல்கள். அவர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைப் பயங்கரவாதிகளுக்குக் கொண்டு செல்வது மற்றும் ஹவாலா மூலம் அவர்களுக்குத் தேவையான நிதியை ரெடி செய்து தருவது ஆகியவை இவர்களது பணியாகும். பாகிஸ்தானில் சென்று பயிற்சி பெற்று வந்த இருவருக்கு இவர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதே இவர்களது டாஸ்க்கா இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications