SIR: தலைநகர் டெல்லியிலேயே ஏகப்பட்ட குளறுபடி.. தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!
டெல்லி: SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்விகளை அடுக்கியிருக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது.

டெல்லியில் 2026ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்த பல வாக்காளர்கள், SIR நடவடிக்கையின்போது.. கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதற்காக, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். அவ்வாறு நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க, படிவம் 6-ஐ தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. ஆனால், முதல்முறை வாக்காளர்களுக்காகத்தான் படிவம்-6 வழங்கப்பட்ட வேண்டும். அந்த படிவத்தில், நான் இதற்கு முன்னர் வாக்களித்ததே இல்லை என்ற உறுதிமொழி இருக்கும். அப்படியெனில், பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு இந்த படிவத்தை எப்படி கொடுக்க முடியும்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
அதைவிட முக்கியமாக டெல்லியில் SIR பணிகளில் போது ஏற்பட்ட குளறுபடிகளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதாவது, டெல்லி போன்ற பெருநகரங்களில் வேலைக்காகவோ.. அல்லது தற்காலிகமாகவோ மக்கள் வீடுகளை மாற்றுவது வழக்கம். அவ்வாறு இடம் பெயர்ந்தவர்கள் அல்லது ஒரு மாதம் வெளியூர் சென்றவர்களின் வீடுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் கணக்கெடுப்பு படிவங்கள் சென்றடைந்திருக்காது. அவர்களை இடம் பெயர்ந்தவர்கள், அல்லது இங்கு இல்லாதவர்கள் என்று லிஸ்ட் போட்டு நீக்குவது தவறு என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், நீக்கப்பட்ட 47 லட்சம் வாக்காளர்களில் 43 லட்சம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்ததாக கூறி நீக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் படிவங்கள் கிடைக்கவே இல்லை. முகவரி மாறியவர்கள் தங்களின் விவரங்களை மாற்ற படிவம் 8-ஐ பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க மறுக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிமன்றம்.. ஒரு வாக்காளர், கணக்கெடுப்பு படிவத்திற்கு பதிலளிக்க தவறிவிட்டார் என்பதற்காக அவருடைய வாக்களிக்கும் உரிமையையே நிரந்தரமாக பறிக்க முடியாது என்று கறாராக கூறியது. அதேபோல.. படிவம் 6க்கு பதிலாக தற்காலிகமாக இடம்பெயர்ந்தவர்களுக்காக ஒரு தனிப்பிரிவை உருவாக்கி அவர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தையோ அல்லது படிவம் 8ஐயோ சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் தற்போது உடனடியாக தேர்தல்கள் ஏதும் வராது என்பதால், அவசரப்படாமல் நீக்கப்பட்ட 43 லட்சம் பேரின் பட்டியலை வெளியிட்டு, அவர்களை அருகில் உள்ள வாக்குச்சாவடி அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு தேர்தல் ஆணையமே முன்வந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, நீதிமன்றத்தின் இந்த ஆலோசனைகளை பரிசீலிப்பதாகவும், தவறை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.
ஆள் இல்லை என்பதற்காக, அவர் வாக்களிக்க தகுதியற்றவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க முடியாது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications
