பெரும்பான்மைக்கு தவிக்கும் பாஜக.. கேம் சேஞ்சர் ஆகும் ஸ்டாலின்! இந்திய அரசியலே மாறப்போகும் முடிவு?
டெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை மீண்டும் கொண்டுவர மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், தேசிய அரசியல் களம் பெரும் சூடுபிடித்துள்ளது. இந்தச் சூழலில், நாடாளுமன்ற மக்களவையில் 22 எம்பிக்களையும், மாநிலங்களவையில் 8 எம்பிக்களையும் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதுதான் இப்போது ஒட்டுமொத்த இந்திய அரசியலின் முதன்மை விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மாநிலங்களவையில் எளிது, மக்களவையில் சவால்!
அரசியலமைப்புத் திருத்த மசோதா ஒன்றை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை அவசியம்.
மாநிலங்களவையை பொறுத்தவரையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 154 உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 4 எம்பிக்களின் ஆதரவும் கிடைத்தால் கூட்டணி பலம் 158 ஆக உயரும். இதனால் மாநிலங்களவையில் 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்கு NDA கூட்டணிக்கு மேலும் 6 வாக்குகள் மட்டுமே தேவைப்படுகின்றன.
ஆனால், மக்களவையில் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. தற்போது மக்களவையில் காலியாக உள்ள 3 இடங்களைத் தவிர்த்து மொத்தம் 540 எம்பிக்கள் உள்ளனர். அனைத்து உறுப்பினர்களும் அவைக்கு வந்து வாக்களித்தால், மசோதாவை நிறைவேற்ற 360 எம்பிக்களின் (2/3 பங்கு) ஆதரவு தேவைப்படும்.
மக்களவையின் தற்போதைய பலம் மற்றும் கணிதக் கணக்கு:
தற்போது பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியின் சொந்த பலம் 319 ஆக உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த 20 எம்பிக்கள் மற்றும் சிவசேனா (உத்தவ் பிரிவு) கட்சியிலிருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு வந்த 6 எம்பிக்களின் ஆதரவும் அடங்கும்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்களிப்பின் போது, என்.டி.ஏ கூட்டணிக்கு 298 வாக்குகள் கிடைத்தன (சபாநாயகர் ஓம் பிர்லாவைத் தவிர்த்து 293 என்.டி.ஏ எம்பிக்கள்). மேலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 5 எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் ஆளும் தரப்பால் தற்போது சுமார் 324 வாக்குகளை மட்டுமே நிச்சயமாகத் திரட்ட முடிகிறது. 360 என்ற இலக்கை அடைய இன்னும் 36 வாக்குகள் குறைவாக உள்ளன.
திமுகவின் விலகேல்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, விஜய்யின் 'தமிழக வெற்றி கழகத்துடன்' கூட்டணி அமைத்து துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி, இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியுள்ளது. இதன் காரணமாக, தொகுதி மறுவரையறை மசோதா விஷயத்தில் திமுக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுவரை இம்மாசோதாவிற்கு ஆதரவளிப்பது குறித்து திமுக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. "மசோதாவின் புதிய வரைவை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவை எடுப்போம்" என்று திமுக தலைமை தொடர்ந்து கூறிவருகிறது.
காங்கிரஸுடன் இணைந்து செயல்படாவிட்டாலும், எதிர்க்கட்சி வரிசையிலேயே தாங்கள் தொடர்வதாக திமுக தலைவர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் வந்தே மாதரம் தொடர்பான மசோதா மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான மசோதாக்களின் போது, திருத்தங்களைக் கொண்டுவந்து எதிர்த்து வாக்களித்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
21-ஆம் நூற்றாண்டின் எட்டப்பன்
இதனிடையே, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் திமுக இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்காது என்ற நம்பிக்கையில் உள்ளன. முன்னதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், இம்மாசோதாவின் நகலை எரித்து அடையாள எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.
அதே நேரத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் எந்தவொரு கட்சியும் 21-ஆம் நூற்றாண்டின் 'எட்டப்பன்' ஆகக் கருதப்படும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு உதவிய 18-ஆம் நூற்றாண்டு குறுநில மன்னன் எட்டப்பனின் வரலாற்றைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு சாடியுள்ளார்.
திமுகவின் முடிவால் மாறப்போகும் கணக்குகள்:
ஒருவேளை திமுக மத்திய அரசுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தால், என்.டி.ஏ கூட்டணியின் ஆதரவு வாக்குகள் 346 ஆக அதிகரிக்கும். அப்போது 2/3 பெரும்பான்மை பெற மேலும் 14 வாக்குகள் மட்டுமே தேவைப்படும்.
மாறாக, திமுக இம்மாசோதா மீதான வாக்களிப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தால், அவையில் வாக்களிக்கும் மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 518 ஆகக் குறையும். அப்போது 2/3 பெரும்பான்மைக்கான இலக்கு 345 ஆக மாறும். இந்தச் சூழலில் மசோதாவை நிறைவேற்ற என்.டி.ஏ கூட்டணிக்கு மேலும் 21 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும்.
மொத்தத்தில், மத்திய மோடி அரசு இந்த மசோதாவை மீண்டும் கொண்டுவந்தால், டெல்லி நாடாளுமன்றத்தில் திமுகவின் 22 எம்பிக்கள் எடுக்கும் முடிவே இந்திய அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications
