"கல்விக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி" காங்கிரஸ் வாக்குறுதி-புது கல்விக்கடன் குறித்தும் மேஜர் அறிவிப்பு
டெல்லி: காங்கிரஸ் இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அதில் மாணவர்களால் பெறப்பட்ட கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற முக்கிய வாக்குறுதி இடம் பெற்றுள்ளது.
நமது நாட்டில் கடந்த காலங்களில் மாணவர்கள் உயர்கல்வி பெற மிகப் பெரியளவில் உதவியது என்றால் அவை கல்விக்கடன்கள் தான். வங்கிகள் குறைந்த வட்டியில் தந்த கடன்களைப் பெற்றுப் படித்தவர்கள் ஏராளம்.

அதேநேரம் மாணவர்கள் பலர் இப்போது வேலை இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் கல்விக்கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் கல்விக்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கம் இருக்கிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நமது நாட்டில் லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இடம் பெற்றுள்ளது. மொத்தம் 48 பக்கங்களைக் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில் பல முக்கிய வாக்குறுதிகள் உள்ளன. குறிப்பாகக் கல்வி தொடர்பாகவும் கல்விக்கடன் குறித்தும் இதில் பல முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
கல்விக்கடன்: காங்கிரஸ் அரசில் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் கல்விக்கடன் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் இதன் கீழ் மாணவர்களுக்கு 7.5 லட்ச ரூபாய் வரை எந்தவொரு செக்யூரிட்டியும் இல்லாமல் கடன் வழங்க வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளித்து கல்விக் கடன் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கல்விக்கடன் தள்ளுபடி: நாட்டில் வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் இருப்பதால், ஒரு முறை நடவடிக்கையாக, மார்ச் 15, 2024 வரையிலான கல்விக் கடன் மற்றும் வட்டி ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். வங்கிகளுக்கு அரசு மூலம் இழப்பீடு வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தும் நிலையில், இதில் மிக முக்கியமான வாக்குறுதியாகப் பார்க்கப்படுகிறது.
கல்வி தொடர்பாகக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. கல்வி உரிமைச் சட்டம் என்பது ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை: பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை என்பது பல்வேறு கல்வியாளர்களாகும் மாநில அரசுகளாலும் எதிர்க்கப்படும் ஒன்றாக இருந்தது. கல்வி பொதுப் பட்டியலில் இருக்கும் நிலையில், இதில் மாநில அரசுகளின் உரிமைகள் மதிக்கப்படும். மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க மாநில அரசுகள் கமிட்டி அமைப்பதை ஊக்குவிப்போம் எனத் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பது தவிர்த்து மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், நிரந்தர பணிகளில் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஆசிரியர்கள் நியமனம் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்து நாட்டில் இருக்கும் கேந்திர வித்யாலயா, நவோத்யா வித்யாலயா மற்றும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகள் அதில் கூறப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications