SIRல் தேர்தல் அதிகாரிகள் பெயர்களே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
டெல்லி: தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் தேர்தலுக்கு முன்பு எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இதில் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர். இது பெரிய சர்ச்சையாக இருந்த நிலையில், அங்குத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 65 பேரின் பெயர்களே இதில் நீக்கப்பட்டுள்ளதாம். இது தொடர்பாக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
நாடு முழுக்க தேர்தல் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் திட்டமிட்டபடி எஸ்ஐஆர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் சுமார் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டனர். இது அங்கு ஏற்கனவே பெரும் சர்ச்சையாகியுள்ளது.

தேர்தல் அதிகாரிகள்
இதற்கிடையே தேர்தலை நடத்தும் 65 தேர்தல் அதிகாரிகளின் பெயர்களே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த 65 பேரும் தேர்தல் நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், அவர்களால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட போதும், அவர்களுக்கு சாதகமான ஒரு பதில் கிடைக்கவில்லை.
முறையீடு
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் மேற்கு வங்கத்தில் மட்டும் 90.8 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதில் தங்களது பெயர்களும் விடுபட்டுள்ளதை அறிந்த 65 தேர்தல் அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். அதில் அவர்கள், "தேர்தல் ஆணையம் எங்களுக்குக் கொடுத்த பணி ஆணையில் எங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்கள் உள்ளன. ஆனால், இப்போது பட்டியலைச் சரிபார்த்தால் எண்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் எங்களாலேயே வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்றனர்.
உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர். முதலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகுமாறு அறிவுறுத்தினார். அவர்கள் மேலும், "இந்தத் தேர்தலில் உங்களால் வாக்களிக்க முடியாமல் போகலாம். ஆனால், வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயரைச் சேர்க்கும் உங்களது உரிமை பாதுகாக்கப்படும்" என்றனர்.
அதாவது 27 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் பெயர் நீக்கப்பட்டதற்காக முறையிட்டபோது என்ன பதில் கிடைத்ததோ, அதே பதில்தான் தேர்தல் அதிகாரிகளுக்கும் கிடைத்துள்ளது. இந்தத் தேர்தலில் அவர்களால் வாக்களிக்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது.
எதிர்க்கட்சிகள்
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.. விளிம்புநிலை மற்றும் தங்களுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய சமூகத்தினரின் வாக்குகளைத் திட்டமிட்டுப் பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து நீக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் எனத் தேர்தல் மாநிலங்களில் இந்த எஸ்ஐஆர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை அங்கு நேற்றைய தினம் நடந்த முதற்கட்டத் தேர்தலில் பதிவான 92.8% வாக்குகள் பதிவானது. மேற்கு வங்க வரலாற்றில் இந்தளவுக்கு வாக்குப்பதிவு அதிகரித்ததே இல்லை என்று பலரும் ஆச்சரியமடைந்தனர். இருப்பினும், இது 91 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பிறகு கணக்கிடப்பட்டது என்றும், இது ஒரு செயற்கையான உயர்வு என்றும் நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
பெரிய முரண்
ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில், அந்தத் திருவிழாவை முன்னின்று நடத்தும் அதிகாரிகளுக்கே தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற அனுமதி மறுக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய முரணாக நிற்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகளே நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications