'பட்டாசுகளுக்கு தடை..' தீபாவளிக்கு 4ஆம் ஆண்டாக தொடரும் கட்டுப்பாடுகள்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
டெல்லி: தலைநகர் டெல்லியில் நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் பட்டாசுகள் விற்க மற்றும் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன.
சர்வதேச அளவில் மிக மோசமாகக் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

தீபாவளிக்குக் கட்டுப்பாடு
குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மிக மோசமான ஒரு நிலையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அங்குக் காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்று வருகிறது. இந்நிலையில், காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகள் வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த 3 ஆண்டுகளாகவே தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு வெடிக்கத் தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டாசு வெடிக்கத் தடை
இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியின் காற்று மாசுபாட்டின் ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் தீபாவளி சமயத்தில் பட்டாசுகள் வெடிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டன. இந்த ஆண்டும் அதேபோல தீபாவளி பண்டிகை சமயத்தில் அனைத்து வகையான பட்டாசுகளையும் சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் வெடிக்கவும் முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல தடை விதிக்கப்பட்டது. இதனால் வணிகர்களுக்கு நஷ்டம் ஏற்படுவது உண்மைதான். இருப்பினும் சிலர் முறைகேடாகப் பட்டாசுகளைப் பதுக்கி விற்பனை செய்தனர். இதனால் தலைநகரில் காற்று மாசு அதிகரித்தது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தலைநகரில் காற்று மாசு
கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லியில் காற்று மாசு என்பது முக்கியமான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது அனைவருக்கும் தெரியும். குறிப்பாகக் கடந்த 2019இல் காற்று மாசு உச்சமடைந்ததால் டெல்லியில் பொதுச் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. மேலும், நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் அப்போதே மக்கள் முடிந்தவரை வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. காற்று மாசை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திணறும் டெல்லி
காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கு டெல்லி அரசு திணறி வந்தது என்பதே உண்மை. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய கழிவுகளை எரிப்பதாலேயே காற்று மாசு நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில் அதிகரிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இருப்பினும், தலைநகரில் ஏற்படும் காற்றுமாசில் 10 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே விவசாய கழிவுகளை எரிப்பதால் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
|
உதவிய கொரோனா
இதையடுத்து காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குச் சாலைகளில் வாகனங்களுக்கு ஆட் ஈவன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மேலும், சில வாரங்களுக்கு புதிய கட்டுமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. இருந்தாலும்கூட காற்று மாசு அங்கு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதேநேரம் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால், வெறும் சில வாரங்களிலேயே தலைநகரில் காற்று மாசு வெகுவாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications