இந்தியாவில் 5 மடங்கு உயர்ந்த கொரோனா.. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் மரணங்கள்! உடனே மாஸ்க்கை போடுங்க
டெல்லி: இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆசியாவில் பல இடங்களில் கொரோனா அதிகரிக்கும் நிலையில், இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது. இதற்கிடையே நமது நாட்டில் இப்போது வைரஸ் பாதிப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் பரவிய கொரோனா அதன் பிறகு உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. உலகின் அனைத்து நாடுகளும் ஊரடங்கிற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமானது. அதிலும் இந்த கொரோனா அலை அலையாக தாக்கியது. இதனால் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. உலகின் எந்த நாடும் இதில் இருந்து தப்பவில்லை.

கொரோனா கேஸ்கள்
வேக்சின் மற்றும் தடுப்பு நடவடிக்கை என பெரும் போராட்டத்திற்கு பிறகே வைரஸ் பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். அதேநேரம் இன்னுமே கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு பல நாடுகளை படுத்தி எடுத்தே வருகிறது. இதற்கிடையே இப்போது மீண்டும் ஆசியாவில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. முதலில் சிங்கப்பூர், ஹாங்காங்கில் வைரஸ் பாதிப்பு உயர்ந்த நிலையில், மெல்ல இதர ஆசிய பகுதிகளிலும் பாதிப்பு உயர்ந்து வருகிறது.
5 மடங்கு அதிகரித்த கொரோனா
அதன்படி இந்தியாவிலும் பல மாதங்களுக்கு பிறகு வைரஸ் பாதிப்பு திடீரென உயர தொடங்கியுள்ளது. இந்தியாவில் இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,710ஐ தாண்டியிருக்கிறது. நமது நாட்டில் வைரஸ் பாதிப்பு இரண்டு வாரங்களில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வைரஸ் பாதிப்பு 500ஆக இருந்த நிலையில், இப்போது அது ஐந்து மடங்கு அதிகரித்து 2700ஐ தாண்டியுள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. நாட்டில் பதிவான ஒட்டுமொத்த வழக்குகளில் சுமார் 40%, அதாவது 1,147 கேஸ்கள் கேரளாவில் தான் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (424), டெல்லி (294), குஜராத் (223), கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 148 கேஸ்கள், மேற்கு வங்கத்தில் 116 கேஸ்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழப்புகள்
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக ஏழு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இந்தாண்டு கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிராவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், டெல்லி, குஜராத், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளன.
அதேநேரம் கடந்த காலங்களில் பரவியதை காட்டிலும் இப்போது பரவும் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றே சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பீதி அடையத் தேவையில்லை என்றும் இது வழக்கமான தொற்றை போலவே இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாஸ்க் அறிவுறுத்தல்
இதுவரை பூஸ்டர் வேக்சின் மீண்டும் செலுத்த அரசு அறிவுறுத்தல் எதையும் வழங்கவில்லை. அதேநேரம் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்க தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
