மனித வெடிகுண்டான பெண்.. “அனைவரும் குணமடையனும்” - துருக்கி குண்டுவெடிப்புக்கு இந்தியா இரங்கல்
டெல்லி: இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கும், துருக்கி அரசுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பக்சி கூறி இருக்கிறார்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரத்தின் இஸ்திக்லால் பகுதியில் அமைந்து இருக்கும் புகழ்பெற்ற கடை வீதியில் நேற்று மாலை யாரும் எதிர்பாராத வகையில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 80 க்கும் அதிகமான மக்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
துருக்கியை உலுக்கிய குண்டு வெடிப்பு.. 6 பேர் பலி! ஒருவர் கைது - மனித வெடிகுண்டாக இருந்தது பெண்ணா?

மனித வெடிகுண்டு
துருக்கி துணை அதிபர் ஃபுவாத் ஒக்டாய், இஸ்தான்புலில் நடைபெற்றது தற்கொலைப்படை தாக்குதல் என்று கூறி இருக்கிறார். தாக்குதலில் ஈடுபட்டவர் பெண்ணாக இருக்கலாம் என அவர் தெரிவித்து உள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்
இதுகுறித்து துருக்கி அதிபர் ரிசன் தயீப் எர்டோவன் கூறுகையில், "பயங்கரவாத தாக்குதலுக்கான குறியீடுகள் இதில் தெரிகிறது." என்றார். துருக்கியில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல நாடுகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியா இரங்கல்
இந்தியாவும் துருக்கி குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்காக துருக்கி அரசு மற்றும் துருக்கி மக்களுக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்த வேண்டுகிறோம்.

இஸ்தான்புல் ஆளுநர்
"துருக்கி நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:20 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது." என இஸ்தான்புல் ஆளுநர் அலி எலிகாயா தெரிவித்துள்ளார். தாக்குதல் நடைபெற்ற இஸ்திக்லால் கடை வீதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டுகளிலும் இதேபோன்ற குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை தீவிரம்
குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்திக்லால் கடைவீதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் அப்பகுதி கொண்டு வரப்பட்டு உள்ளது. தடயங்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.