15 முக்கிய நகரங்களை குறிவைத்து.. நள்ளிரவில் தாக்க முயன்ற பாகிஸ்தான்.. முறியடித்த இந்திய ராணுவம்!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள நிலையில், அதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயன்றுள்ளது. நேற்றிரவு 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்த முயன்ற டிரோன் தாக்குதலை நமது பாதுகாப்புப் படைகள் முறியடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்குப் பதிலடியாக லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா செயலிழக்க வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நேற்றிரவு வெற்றிகரமாக நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பல தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. சுமார் 100 தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு
இதற்கிடையே இந்தியாவின் வெற்றியைக் கண்டு பொறுக்காத பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இருப்பினும், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தவிருந்த தாக்குதல் திட்டத்தை நமது பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. நள்ளிரவில் 15 இந்திய நகரங்களைத் தாக்குதல் நடத்த முற்பட்ட பாகிஸ்தான் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. டிரோன் மூலம் தாக்க முயன்ற பாகிஸ்தான் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பிஐபி மூலம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "மே 07ம் தேதி நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர் சந்திப்பிலேயே இந்தியா தனது பதிலடியைச் சரியாகத் திட்டமிட்டு நடத்தியதாகக் கூறியிருந்தோம். பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்பதைக் குறிப்பாகக் கூறியிருந்தோம். இந்தியாவில் உள்ள ராணுவ இலக்குகள் மீதான எந்தவொரு தாக்குதலும் தக்கப் பதிலடியைத் தரப்படும் என்றும் சொல்லியிருந்தார்.
எந்த 15 நகரங்கள்
இதற்கிடையே மே 07-08 இரவு, அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல ராணுவ நிலைகளைக் குறிவைத்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. இதை ஒருங்கிணைந்த யுஏஎஸ் சிஸ்டம் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் அழிக்கப்பட்டன. இதன் பாகங்கள் பாகிஸ்தான் தாக்குதல்களை நிரூபிக்கும் வகையில் பல இடங்களில் இருந்து மீட்கப்படுகின்றன.
லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பு
இன்று காலை இந்தியப் பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்களையும் அமைப்புகளையும் குறிவைத்துத் தாக்கின. பாகிஸ்தானுக்குத் தக்கப் பதிலடி கொடுப்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவின் பதிலடியில் லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பதற்றத்தைத் தவிப்பதில் இந்தியப் பாதுகாப்புப் படைகள் கவனமாக உள்ளன.
பதிலடி
ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி செக்டார்களில் மோர்டார் மற்றும் கனரகப் பீரங்கிகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.. பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு காரணமாக மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 16 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இங்கும் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications