3-வது அலை அச்சம்+விழிப்புணர்வு.. நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்கிறது
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் அளவு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
மே 23 அன்று இந்தியா முழுக்க 10.47 லட்சம் டோஸ் போடப்பட்டது. ஆனால், மே 27ம் தேதி மூன்று மடங்காக அதிகரித்து 30.24 லட்சம் தடுப்பூசிகளாக மாறியுள்ளது.

மே மாதத்தில் தடுப்பூசி அளவு நாளுக்கு நாள் மாறியபடி இருந்தது. மே 1 ஆம் தேதி, இந்தியாவில் 18.26 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்த நாள், இந்த எண்ணிக்கை வெறும் 3.82 லட்சம் அளவுகளாக சரிந்தது. அப்போதிருந்து, தடுப்பூசிகள் ஒரு நாளைக்கு 7 முதல் 25 லட்சம் டோஸ் என்ற அளவுகளில் உள்ளன.
Covid19india.org இன் தரவுப்படி, மே 4 ம் தேதி 48.69 லட்சம் அளவு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், இந்த எண்ணிக்கை மே 21 அன்று 14.93 லட்சமாகக் குறைந்தது, பின்னர் அது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது.
மே 22 அன்று, இந்த எண்ணிக்கை 16.31 லட்சமாக உயர்ந்தது, மே 23 அன்று 10.47 லட்சமாக சரிந்தது, மே 24 அன்று 24.87 லட்சமாக இருந்தது. மே 25 முதல், இந்த எண்ணிக்கை பொதுவாக மேல்நோக்கியே சென்றபடி உள்ளது. கொரோனா 3வது அலை குறித்த பயமும், தடுப்பூசி போட்டவர்கள் ஆரோக்கியமாக உள்ளார்கள் என்ற தகவல்களை அறியப்பெற்றதும் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்துள்ளது. மே 27 அன்று 30.24 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன.
ஜனவரி மாதமே தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் இப்போதுதான் நாட்டு மக்கள் தொகையில், 14 சதவீதம் பேர் ஒரு டோஸ் ஷாட்டாவது போட்டுள்ளனர். ஏப்ரல் மாதம், துவக்கத்தில், 42 லட்சம் தடுப்பூசிகள் ஒரே நாளில் போடப்பட்டன. ஆனால், ஏப்ரல் இறுதி வாரங்களில், இந்தியாவில் கொரோனா மிக மோசமான உச்சநிலையை அடைந்தபோது, தடுப்பூசி போடும் வேகமும் குறைந்திருந்தது.
இப்போது, மக்களிடையே தடுப்பூசி செலுத்த ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், அரசிடம் போதிய ஸ்டாக் இல்லை.
மே 14 அன்று, சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில், "2021 மே 16 முதல் 31 வரை 15 நாட்களில், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் மொத்தம் 191.99 லட்சம் டோஸ்கள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதில் 162.5 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் 29.49 லட்சம் கோவாக்சின் ஆகியவை அடங்கும். " என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மே 19 அன்று மற்றொரு அறிக்கையில், "2021ம் ஆண்டு மே 1 முதல் 2021 ஜூன் 15 வரை மாநில அரசுகளுக்கு மொத்தம் 5 கோடி 86 லட்சம் மற்றும் 29 ஆயிரம் டோஸ் மத்திய அரசால் இலவசமாக வழங்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோவாக்சின் தடுப்பூசி உற்பத்திக்கும், உண்மையான சப்ளை அளவுக்கும் இடைவெளி இருக்கிறது என்று சமீபத்தில் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இருப்பு 6 கோடி டோஸ் என்றாலும், மக்களுக்கு செலுத்தப்பட்டது 2 கோடி டோஸ்தான். எனவே 4 கோடி டோஸ் எங்கே போனது என தெரியவில்லை என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மாநில அரசுகளிடம் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி இருப்பு இருப்பதாக மத்திய அரசு பொய்கூறி வருகிறது. ஆனால் பல மாநில அரசுகள் தங்களிடம் தடுப்பூசி இருப்பு இல்லை என்கிறார்கள். இதில் யார் பொய் உரைக்கிறார்கள்? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படியான சூழ்நிலையில் மக்களிடம் தடுப்பூசி போட ஆர்வமும் அதிகரித்துள்ளதால், தடுப்பூசி வழங்குவதற்கு மத்திய அரசு தடுமாறி வருகிறது.












Click it and Unblock the Notifications