பயணிகளுக்கு குட் நியூஸ்.. டிசம்பர் 15 முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடக்கம்.. முழு விவரம்!
டெல்லி: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பல மாதங்கள் பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முடங்கியது. பயணிகள் விமான சேவைக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேருந்து போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது. பயணிகள் ரயில் சேவையும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. ஆனால் விமான போக்குவரத்தை பொறுத்தவரை இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை சீரடைந்தாலும், வெளிநாடுகளுக்கு விமான சேவை சீராகவில்லை.

வெளிநாடுகளுக்கு விமான சேவை
கொரோனா தொடக்க காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க 'வந்தே பாரத்' என்னும் திட்டத்தின் மூலம் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கியது. இதன்பிறகு பல்வேறு நாடுகளுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியா வெளிநாடுகளுக்கு வழக்கமான பயணிகள் விமான சேவையை இன்னும் தொடங்கவில்லை. கொரோனா கட்டுக்குள் வரும் நிலையில் வெளிநாடுகளுக்கு வழக்கமான விமானங்களை இயக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.

டிசம்பர் 15-ம் தேதி முதல்...
இந்த நிலையில் டிசம்பர் 15-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சர்வதேச விமான பயணிகள் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ''இந்தியாவிற்கும் வெளியேயும் திட்டமிடப்பட்ட வணிக, சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே டிசம்பர் 15 முதல் மீண்டும் வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கும்'' என்று விமான போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

3 வகையாக பிரிக்கப்படும்
கொரோனா பாதிப்பு அடிப்படையில் நாடுகளை 3 வகையாக பிரித்து பயணிகள் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கொரோனா அதிக தாக்கம், கொரோனா பாதிப்பு குறைவு என நாடுகள் பட்டியல் செய்யப்பட்டு விமானங்கள் இயங்கும் அட்டவணை முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

புதிய வகை உருமாறிய கொரோனா
தற்போது தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு அண்டை நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா, புதிய வைரஸ் பாதிப்புள்ள போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங்கில் இருந்து பயணிகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டிசம்பர் 15-ம் தேதிக்குள் புதிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவினால் அந்த நேரத்தில் அதற்கேற்ப முடிவு மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications