இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு போகாது என்ற நிர்மலா சீதாராமன்! "நறுக்" பதிலடி கொடுத்த சு.சாமி
டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கி கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய நிலையில் அதற்கு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சனத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் கடந்த மாதம் 18 ம் தேதி துவங்கினாலும் கூட உரிய முறையில் விவாதங்கள் நடைபெறவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலையேற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அது ஏற்கப்படவில்லை. இதனால் கூச்சல் குழப்பத்துடன் சபை நடவடிக்கைகள் முடங்கின.

நாடாளுமன்றத்தில் விவாதம்
இரு சபைகளிலும் இந்த பிரச்சனை எதிரொலித்ததால் மொத்தம் 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நேற்று விலைவாசி உயர்வு தொடர்பாக லோக்சபாவில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதையடுத்து காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, திமுக எம்பி கனிமொழி, தமிழக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் உள்ளிட்டவர்கள் விலைவாசி உயர்வு குறித்து பேசி அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

நிர்மலா சீதாராமன் விளக்கம்
இதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இந்த விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது நாட்டின் பொருளாதார நிலைமை, விலைவாசி விவகாரங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். இந்த விவாதத்தின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

மந்த நிலை-தேக்க நிலை இல்லை
உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது. கொரோனா இடர்பாடுகளையும் கடந்து உலகின் பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதார வளர்ச்சி மீண்டுள்ளது. கொரோனா, ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்ட சூழலிலும் 7 சதவீதத்திற்குள் பணவீக்கத்தை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை'' என்றார்.
Recommended Video

சுப்பிரமணியசாமி விமர்சனம்
இதனை தற்போது பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர்த தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை'' என்று மத்திய நிதியமைச்சர் கூறியதாக இன்று ஊடக செய்திகள் கூறுகின்றன. அவர் சொல்வது சரிதான். ஏனென்றால் கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்துவிட்டது. எனவே தற்போது இந்திய பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்வது குறித்த கேள்வி எழவே இல்லை '' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications