"10,000 முறை கேட்டாலும் சொல்வேன்.. காஷ்மீர் பைல்ஸ் இழிவான படம்தான்!" இஸ்ரேல் இயக்குநர் லேபிட் பரபர
டெல்லி: கோவா திரைப்பட விழா கடைசி நாளன்று காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து இஸ்ரேல் இயக்குநர் நாடவ் லேபிட் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக அவரே விளக்கமளித்துள்ளார்.
ஆசியாவின் மிகவும் பழமையான திரைப்பட விழா என்றால் அது கோவா திரைப்பட விழா. இதில் இந்தியத் திரைப்படங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்களும் கூட திரையிடப்படும்.
கடந்த நவ.20ஆம் தேதி தொடங்கிய இந்த கோவா திரைப்பட விழா, மொத்தம் 9 நாட்கள் நடைபெற்ற நிலையில், கடந்த நவ.25ஆம் தேதி திரைப்பட விழா கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் பல்வேறு பிரிவுகளில் நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
வெட்கப்படுறேன்.. வேதனைப்படுறேன்! காஷ்மீர் பைல்சை விமர்சித்த இயக்குநருக்கு இஸ்ரேல் தூதர் கண்டனம்

கோவா திரைப்பட விழா
மத்திய அரசுடன் இணைந்து கோவா மாநில அரசு இந்த 53வது சர்வதேச கோவா திரைப்பட விழாவை நடத்தியது. இந்தாண்டு மொத்தம் 70 நாடுகளில் இருந்த வந்த 280க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. அதன்படி கடந்த மார்ச் மாதம் ரீலிசான தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் திரையிடப்பட்டன. இதற்கிடையே விழாவின் கடைசி நாளன்று இஸ்ரேலிய திரைப்பட இயக்குநரும் தேர்வுக்குழு ஜூரியுமான நாடவ் லேபிட் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தி காஷ்மீர் பைல்ஸ்
தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் இழிவானது எனக் குறிப்பிட்ட நாடவ் லேபிட், அது வெறுப்புணர்வைத் தூண்டும் திரைப்படம் என்றும் அது திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை என்றும் அவர் சாடினார். அவரது பேச்சு இணையத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்தியாவில் இருந்து பலரும் நாடவ் லேபிட் கருத்துக்கு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதற்கிடையே இஸ்ரேல் நாட்டின் தூதரும் கூட நாடவ் லேபிட் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் கடந்த சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இது தொடர்பாக நாடவ் லேபிட் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

விளக்கம்
கோவா திரைப்பட விழாவுக்குப் பின், அவர் இந்தியாவில் இருந்து கிளம்பிவிட்டார். இப்போது இஸ்ரேலில் இருக்கும் அவர், இது தொடர்பாக ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு நாடவ் அளித்த பேட்டியில், "நான் யாரையும் அவமதிக்க விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்களையோ அல்லது அவர்களது உறவினர்களையோ அவமதிப்பது எனது நோக்கம் இல்லை. எனது பேச்சு அவர்களுக்கு அப்படிப் புரிந்திருந்தால், அதற்கு நாம் மனப்பூர்வமாக மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். நான் இதில் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிக் குறித்து எதுவும் தவறாகச் சொல்லவில்லை. அது எனது நோக்கமும் இல்லை.

இழிவானதுதான்
ஆனால் அதே நேரத்தில், நான் என்ன சொன்னேனோ அதில் நான் உறுதியாக உள்ளேன். இது ஒரு இழிவான திரைப்படம் தான். வெறுப்புணர்வைத் தூண்டும் ஒரு பிரசார திரைப்படம். இது போன்ற கவுரவமான திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் அது இல்லை என்பதே எங்கள் அனைவரின் கருத்தாகும். இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதை நான் திரும்பத் திரும்ப சொல்லவும் கூட தயாராகவே உள்ளேன்.

காஷ்மீர் விவகாரம்
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அங்குப் பாதிக்கப்படுபவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனது கருத்து இதைப் பற்றியது அல்ல. நான் இதைப் பற்றிப் பேசவில்லை.. நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் கூட எனது நிலைப்பாடும் கருத்தும் அதுதான். நான் அரசியல் பிரச்சினை குறித்தோ காஷ்மீரில் நடந்த அந்த நிகழ்வு குறித்தோ எதுவும் பேசவில்லை. நான் அந்த திரைப்படம் குறித்து மட்டுமே எனது கருத்தைத் தெரிவித்தேன்.

தகுதியான படம் இல்லை
இது போன்ற முக்கியமான பிரச்சினை குறித்து ஒருவர் படம் எடுக்கிறார் என்றால், அதை சீரியஸாக எடுக்க வேண்டும். காஷ்மீர் பைல்ஸ் அதற்குத் தகுதியான படமாகத் தெரியவில்லை. அதேபோல சிலர் இது நான் சொன்னது தனிப்பட்ட கருத்து எனச் சொல்கிறார்கள். உண்மையில் அது எனது தனிப்பட்ட கருத்து இல்லை. ஒட்டுமொத்த ஜூரி உறுப்பினர்களும் அப்படித்தான் யோசித்தார்கள். விரோதம், வன்முறை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு செய்தியை இந்தப் படம் சொல்ல வருகிறது. இந்தத் திரைப்படம் பிரசார முறையில் மோசமான, வன்முறையைப் பயன்படுத்தியதாகவே நாங்கள் அனைவரும் நினைத்தோம்.

கோபம்
அந்த இயக்குநர் நிச்சயம் கோபத்தில் இருப்பார் என எனக்குத் தெரியும். என் படத்தைப் பற்றி யாராவது இப்படிச் சொன்னால் எனக்கும் தான் கோபம் வரும். எனது படங்களும் சர்ச்சையை ஏற்படுத்தும். சிலர் எனது திரைப்படங்கள் குறித்தும் கூட மிகவும் கடுமையான மற்றும் கொடூரமான விஷயங்களைக் கூறியுள்ளனர். அங்கே என்ன நடந்தது என்பது கேள்வி இல்லை. இது இயக்குநருக்கும் தெரியும்.. நான் தொடங்கி ஜூரியில் இருந்த யாருக்கும் அங்கே என்ன நடந்தது என்பது துல்லியமாகத் தெரியாது. நான் கூறிய கருத்துகள் குறிப்பிட்ட திரைப்படத்தைப் பற்றியது மட்டுமே.

திரைப்பட விமர்சனம்
இஸ்ரேல் தூதருக்கும் நான் படத்தைப் பற்றித் தான் பேசினேன் என்பது தெரியும்.. இருப்பினும் அவரும் கூட நான் ஏதோ காஷ்மீரில் நடந்த சோகத்தை அவமரியாதையாகப் பேசியதற்காக என்னைச் சாடினார்.. அவர் ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக அப்படிச் சொல்ல நேர்ந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன். ஒரு திரைப்பட இயக்குநராக அந்த திரைப்படத்தைப் பற்றி நான் மதிப்பீடு மட்டுமே செய்தேன். கேன்ஸ், பெர்லின் போன்ற திரைப்பட விழாக்களில் என்னைத் தலைமை தாங்க அழைத்ததைப் பேலவே கோவா திரைப்பட விழாவிலும் நான் அழைக்கப்பட்டேன். எந்தவொரு படைப்பைப் பார்த்தாலும் உண்மையைச் சொல்வதே எனது கடமை.. அதைத் தான் நான் செய்தேன்" என்றார்.