உ.பி. போலீஸ் மீது 'நோ' நம்பிக்கை-சிபிஐ விசாரிக்கனும்- லக்கிம்பூரில் கொல்லப்பட்ட பாஜக நிர்வாகி மனைவி
டெல்லி: லக்கிம்பூரில் தமது படுகொலை தொடர்பாக உத்தரப்பிரதேச போலீசார் நடத்தும் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கொல்லப்பட்ட பாஜக நிர்வாகியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி. லக்கிம்பூரில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது சொகுசு கார் ஏற்றப்பட்டதில் 4 பேர் மரணம் அடைந்தனர். இதனையடுத்து நடந்த வன்முறையில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.

விசாரணைக்கு எதிர்ப்பு
இவர்களில் பாஜக நிர்வாகி ஷ்யாம் சுந்தரும் ஒருவர். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை உ.பி.யில் ஆளும் பாஜக அரசு அமைத்துள்ளது. ஆனால் இந்த விசாரணை ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை; வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் இன்று உத்தரவிட்டிருந்தது.

போலீஸ் கஸ்டடியில் ஷ்யாம் சுந்தர்
இது உத்தரப்பிரதேச அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட பாஜக நிர்வாகி ஷ்யாம் சுந்தரின் மனைவி ரூபா தேவி சார்பில் மூத்த வழக்கறிஞர் அருண் பரத்வாஜ் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரணையின் போது குறுக்கிட்ட அருண் பரத்வாஜ், ஷ்யாம் சுந்தர் கொல்லப்படுவதற்கு முன்னதாக போலீசாருடன் இருந்ததை பலரும் பார்த்துள்ளனர். இங்கு தாக்கல் செய்திருக்கும் படத்தில் கூட ஏகே 47 ரக துப்பாக்கிகள், புல்லட் ப்ரூப் ஜாக்கெட் அணிந்த போலீசார் பாதுகாப்பில்தான் ஷ்யாம் சுந்தர் இருந்தார்.

உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
இந்த போட்டோவை உ.பி. மாநில அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு 15 நாட்களுக்கு முன்னர் இ மெயிலில் அனுப்பி இருந்தேன். ஆனால் இதைபற்றி உ.பி. அரசு கண்டு கொள்ளவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றம் விசாரணை எதையும் நடத்தவில்லை. அப்படி இருக்கும் போது இதுபோன்ற படங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றனர்.

சிபிஐ விசாரணை தேவை
இதனைத் தொடர்ந்து வாதிட்ட பரத்வாஜ், இந்த படத்தில் உள்ள போலீசாரின் மொபைல் போன்கள் விசாரணையின் போது ஆராயப்படவில்லை. எங்களுக்கு உத்தரப்பிரதேச அரசின் சிறப்பு புலனாய்வு விசாரணை மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். ஆனால் இதனை நிராகரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணை அனைத்துக்குமே தீர்வாகாது என்றனர். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சாட்சிகளுக்கும் உ.பி. அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
