மத்திய பட்ஜெட் 2024.. “மோடி ஆட்சியில் மொத்த நாடும் சிக்கிக்கொண்டது”! ராகுல் காந்தி கடும் சாடல்
டெல்லி: மோடி தலையில் என்டிஏ அரசு மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நடப்பாண்டுக்கான முழு பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. இந்நிலையில் பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி லோக்சபாவில் உரையாற்றினார். இதில் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆதரவுடன் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கிறது. ஆட்சியை அமைத்த பின்னர் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இருவருக்கும் என்டிஏ கூட்டணியில் மரியாதை கூடியது. இப்படி இருக்கையில்தான் பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று நிதிஷ்குமார் கோரியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன.

இருப்பினும் இதை ஈடுசெய்ய பட்ஜெட்டில் பீகாருக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று பேச்சு அடிப்பட்டது. அதேபோல கடந்த 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பீகார் மட்டுமல்லாது ஆந்திராவுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டது.
லோக்சபாவில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், "ஆந்திராவுக்கு சிறப்பு நிதி உதவித் தொகை வழங்கப்படும். சிறப்பு நிதியாக ரூ.15,000 கோடி வழங்கப்படும். சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது. இம்மாநிலத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
அதேபோல, பீகார் குறித்து பேசும்போது, "பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அளிக்கப்படும். இம்மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.26,000 கோடி வழங்கப்படும். பீர்பைண்டியில் புதிய 2400 மெகாவாட் மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட மின் திட்டங்கள் ரூ.21,400 கோடி ஒதுக்கப்படும்.
பீகார் மாநிலத்தின் காயா பகுதியில் உள்ள விஷ்ணுபாதம் கோயில், மகாபோதி கோயில், நாலந்தா மாவட்டத்தில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றை சுற்றுலாத்துறையின் கீழ் மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும். இம்மாநிலத்தில் உள்ள பழமையான கோயில்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும். பீகார் மாநிலத்தின் நீர்பாசன, வெள்ளத்தடுப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும். வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.11,000 கோடி ஒதுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
நிதியமைச்சரின் இந்த அறிவிப்புக்கு லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்தியில் கடும் அமளி எழுந்தது. பாஜக ஆட்சியை பிடிக்க இரு கட்சிகளும் உதவியது என்பதால், அக்கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு அள்ளி கொடுக்கப்படுகிறது என எம்பிக்கள் விமர்சித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. நிர்மலா சீதாராமன் அடுத்தடுத்த அறிவிப்புகளை கேட்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் சபாநாயகர் அமைதி காக்கும்படி வேண்டிக்கொண்டார். இதனையடுத்து மீண்டும் நிர்மலா பட்ஜெட் வாசிக்க தொடங்கினார்.
இப்படி இருக்கையில் இன்று லோக்சபாவில் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். தனது உரையில், "ஒட்டுமொத்த இந்தியாவும் சக்கர வியூகத்தில் சிக்கி இருக்கிறது. பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்களே அச்சத்தில் உள்ளனர். மோடி ஆட்சியில் நாடு சிக்கிக் கொண்டுவிட்டது.
பெரும் முதலாளிகளுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. ஜிஎஸ்டி எனும் வரி பயங்கரவாதத்தை மத்திய அரசு ஏவிவிட்டிருக்கிறது. இந்தியாவை பிடித்த சக்கரவியூகத்தில் 3 சக்திகள் உள்ளன. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எதிர்க்கட்சிகளை ஒடுக்குகின்றன. ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு தொழில்கள் நலிவடைந்துவிட்டன" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications