5 மாநிலங்களில் 38 தொகுதிகளை இழந்த பாஜக! விவசாயிகள் போராட்டத்திற்கு மோடி கொடுத்த விலை?
புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தின் எதிரொலியாக இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 38 தொகுதிகளை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. அதற்கு ஒரு மாதம் முன்னதாக தான் டெல்லி தலைநகரை நோக்கி விவசாயிகள் போராட்டம் தொடங்கியது.

அந்தப் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு மிகக் கடுமையான முயற்சிகளை எடுத்தது. பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழையாமல் தடுப்பதற்காக பல்வேறு புதிய வழிகளை மத்திய அரசு கையாண்டது.
எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விளைபொருட்களுக்கு சட்டப்பூர்வமான ஆதார விலையை வழங்கக்கோரிக் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், கடன் தள்ளுபடி, மின்துறையைத் தனியார் மயமாக்குவதை ரத்து செய்ய வேண்டும், போராட்டக்காரர்கள் மீது போடப்பட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கை விவசாயிகள் முன்வைத்தனர்.
ஆனால், பேச்சுவார்த்தை நடத்தாமல் மத்திய அரசு போராட்டக்காரர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தியது. இந்தப் பிரச்சனை நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது. எதிர்க்கட்சிகள் கண்டனத்தைத் தெரிவித்தன.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறக்கணித்ததால், பல்வேறு மாநிலங்களில் 2019 இல் பாஜக வென்ற இடங்களை இந்தத் தேர்தலில் இழந்தது என்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்ல; மத்திய விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா ஜார்க்கண்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். இந்தச் செய்தி பாஜகவுக்கு அதிர்ச்சி தரக் கூடியதாக மாறியுள்ளது.
மேற்கு உ.பி., பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக வெங்காயம் விளைவிக்கும் விவசாயிகள் அதிகம் வாழும் மண்டலங்களில் பாஜக கிட்டத்தட்ட 38 தொகுதிகளை இழந்துள்ளது. இதற்குக் காரணம் விவசாயிகள்தான்.
இந்த இடங்களில் பாஜக தலைவர்களால் பிரசாரம் செய்ய உள்ளே போகவே முடியவில்லை. அந்தளவுக்கு வேட்பாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இது தொடர்பான காணொளிகள் கூட சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன.
கடந்த பிப்ரவரியில் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக தங்களின் போராட்டத்தை மீண்டும் தொடங்கிய போது, பஞ்சாப்-ஹரியானா எல்லையிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மேலும் ஹரியானா மற்றும் மேற்கு உ.பி.யைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இந்த விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் பிற மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்துள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகன் வாகனத்தைப் போராட்டக்காரர்கள் மீது ஏற்றினார். அந்தக் காட்சி வெளியாகி நாடு முழுக்க எதிர்ப்பை கிளப்பியது.
இந்தச் சம்பவத்தால் மேற்கு உ.பி.யில் உள்ள முசாபர் நகர், சஹரன்பூர், கைரானா, நாகினா, மொராதாபாத், சம்பல், ராம்பூர், லக்கிம்பூர் கெரி ஆகிய இடங்களில் பாஜக இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளது.
ராஜஸ்தானில் 11 இடங்கள், ஹரியானாவில் 5 இடங்களைத் தவிர, கடந்த தேர்தலில் பஞ்சாபில் வென்ற 2 இடங்களையும் பாஜக இம்முறை இழந்துள்ளது. வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் 13 இடங்களில் 12 இடங்களை பாஜக இழந்துள்ளது.
"வெங்காய விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் நலன்களுக்கு எதிரான பல முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. இது விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது" என்று நாசிக் மாவட்ட வெங்காய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கந்து காக்கா தேவ்ரே கூறி இருக்கிறார்.
வெங்காய விவசாயிகளின் கோபம் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது என்றும், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அவர்கள் மீண்டும் அரசுக்கு எதிராகச் செயல்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு விவசாயிகள் அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) வாழ்த்து தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications