ஆளுநர் ரவி டிஸ்மிஸ்? மதிமுக மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய ஜனாதிபதி! அடுத்து என்ன?பின்னணி
டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த மனு ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்என் ரவி உள்ளார். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். இந்த வேளையில் அவர் சனாதன தர்மம் பற்றி பெருமையாக பேசுவதோடு, திராவிட கொள்கைகளை விமர்சனமும் செய்து வருகிறார்.

இதனால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நேரடியாக கருத்து மோதல்கள் உள்ளன. இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் என திமுக சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே தான் சமீபத்தில் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கடந்த ஜூன் 20ம் தேதி வைகோ இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்தில் முதலில் மூத்த இடதுசாரி தலைவர் நல்லகண்ணு கையெழுத்திட்டார்.
அதன்பிறகு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டனர். மொத்தம் 57 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என சுமார் 50 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். துரை வைகோ தலைமையில் இந்த கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதையடுத்து இன்று ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வைகோ எம்பி இந்த கையெழுத்து மனுவை ஒப்படைத்தார். இந்நிலையில் தான் தற்போது இந்த மனு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகம் சார்பில் மதிமுகவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் என்ன சொல்கிறது? என்பதை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications