எங்களையும் பலாத்காரம் செய்தாங்க.. மணிப்பூரில் ”இந்தியா” கூட்டணி எம்பி.க்களை அதிரவைத்த மைத்தேயி பெண்!
டெல்லி: மணிப்பூர் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் சென்றிருந்த போது மைத்தேயி இனப் பெண் ஒருவர் ஆவேசமாக எழுப்பிய குரல் தங்களை அதிரவைத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் பதிவிட்டுள்ளதாவது: மணிப்பூரில் பிஷ்னுபூர் மாவட்டம், மோரேங் என்னும் கிராமத்தில் அமைக்கப்படுள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கியிருக்கும் மெய்ட்டீ (மைத்தேயி) சமூக மக்களைச் சந்தித்தோம். எங்களைப் பார்த்துமே ஒரு இளம்பெண் ஆவேசமாக ஆங்கிலத்தில் கடும் கோபமாக பேசினார்.

குக்கிகளை ஏன் பார்த்தீங்க?: முதலில் குக்கிகளைப் பார்த்துவிட்டு அதன் பின்னர் எங்களைப் பார்க்க வருவது ஏன் என சற்றுக் கடுமையாக குரலை உயர்த்தினார். எமது மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை ஆற்றுப்படுத்தினர். பின்னர் அவர் மெய்ட்டீ சமூகத்தைச் சார்ந்த மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றார்.
முதல்வர் வரவே இல்லை: மாநில அரசும் இந்திய ஒன்றிய கூட்டரசும் தங்களுக்கு கடந்த 80 நாட்களாக நிவாரணப் பணிகளைக் கூட போதிய அளவில் செய்யவில்லை என்று வருந்தினார். முதல்வர் வந்து தங்களைப் பார்க்கவே இல்லை என்றும் வேதனைப்பட்டார்.
குக்கிகள் மீது கோபம்: குக்கி பழங்குடியினர் வாழும் மலைப்பகுதிகளில் மியான்மர் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் கடந்த பல ஆண்டுகளாக வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகவும்; அவர்களே பாப்பி என்னும் போதைப் பொருள் தயாரிக்கும் செடிகளை 15000 ஏக்கருக்கும் மேலான நிலங்களில் பயிரிடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மணிப்பூரில் #பிஷ்னுபூர் மாவட்டம், மோரேங் என்னும் கிராமத்தில் அமைக்கப்படுள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கியிருக்கும் #மெய்ட்டீ சமூக மக்களைச் சந்தித்தோம். எங்களைப் பார்த்துமே ஒரு இளம்பெண் ஆவேசமாக ஆங்கிலத்தில் கடும் கோபமாக பேசினார். முதலில் குக்கிகளைப் பார்த்துவிட்டு அதன் பின்னர்… pic.twitter.com/aCmRo800dy
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 31, 2023
எங்களுக்கும் பாதிப்பு: மெய்ட்டீ சமூகப் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ; மருத்துவப் பரிசோதனைகள் செய்தால் உண்மைகள் வெளிவருமென்றும் கூறினார். குக்கி இனத்தைச் சார்ந்த பெண்கள் பாதிக்கப்பட்டது மட்டுமே சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளிவந்தது. அதைக் கண்டதும் பிரதமர் மோடி கண்டிக்கிறார்; ஆனால் நாங்கள் பாதிக்கப்பட்டதற்கு அவர் என்ன சொல்லப்போகிறார் என்றும் பிரதமரை அந்த இளம்பெண் கடிந்து கொண்டார். சில நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும் போதே கலங்கி அழுதார். உடன் நின்ற பெண்களும் அழுதனர். அக்காட்சி் நெஞ்சைக் கனக்கச் செய்தது.
பூர்வீகத்தை எப்படி இழக்க முடியும்? : மற்றொரு பெண்மணி கூறியதாவது: சுரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள எங்கள் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் எங்கள் பூர்வீகத்தை எவ்வாறு இழக்க முடியும்? இங்கேயே அரசு வீடு கட்டிக் கொடுத்தாலும் மீண்டும் நாங்கள் அங்கேயே செல்ல விரும்புகிறோம். எனது சகோதரியின் குழந்தைக்கு நான்கு நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருந்து கொடுக்கக்கூட வழி இல்லை. இப்படி தனது துயரங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார் அந்தப் பெண்மணி. என்ன படிக்கிறீங்க என்று கேட்டேன். படிக்கவில்லை என்று சொன்னார். நல்ல ஆங்கிலத்தில் பேசினார். பள்ளிக் கல்வியோடு படிப்பை நிறுத்தியிருப்பார் என கருதுகிறேன். உழைக்கும் மக்களுக்கு ஏது இனம், மதம், அரசியல், அதிகாரம் ? ஆனால், அவற்றுக்குப் பலியாவது இந்த எளிய மக்கள்தாம். அவர்களின் வருங்கால வாழ்க்கை என்ன என்கிற கேள்வியோடு - வலியோடு நகர்ந்தேன்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications