நீட்: ராஜஸ்தான், டெல்லி, மே.வங்கத்தில் போராட்டம்- தர்மேந்திர பிரதான் கொடும்பாவி எரிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட், நெட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லி. ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் பல்வேறு மாணவர் அமைப்பினர் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர். மேற்கு வங்கம் சிலிகுரியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொடும்பாவி எரிக்கப்பட்டது. ராஜஸ்தானில் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் மீது தண்ணீர் பீய்ச்சியும் தடியடி நடத்தியும் விரட்ட முயற்சித்தனர் போலீசார். லோக்சபாவில் தர்மேந்திர பிரதான் இன்று எம்பியாக பதவியேற்ற போதும் "NEET NET SHAME SHAME" என "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. நாட்டின் பல பகுதிகளில் நெட், நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் இத்தகைய நுழைவுத் தேர்வு முறையை கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

neet


டெல்லியில் போராட்டம்: தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமின்றி வட இந்திய மாநிலங்களிலும் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் உக்கிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் பெற்றோர்களும் அமர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். நீட், நெட் தேர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நீதி கோரி இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் காங்கிரசார் இன்றும் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மே.வங்கத்தில் போராட்டம்: இதே போல மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தின் போதும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். அப்போதும் கலையாத மாணவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சித்தனர் போலீசார். ஆனாலும் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

லோக்சபாவில் போராட்டம்: 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் எம்பியாக பதவியேற்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்பியாக பதவியேற்ற போது "NEET NET SHAME SHAME" என "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.


திமுக கனிமொழி எம்பி: இத்தகைய போராட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்பியுமான கனிமொழி கருணாநிதி, நீட் தேர்வை தமிழ்நாடு எப்போதுமே எதிர்த்துதான் வருகிறது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. தற்போது நீட் தேர்வுகள் நேர்மையாக வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை என்பது தெளிவாகிவிட்டது. நீட் தேர்வே வேண்டாம் என தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்துகிறது. இப்போது ஒட்டுமொத்த இந்தியாவுமே இந்தக் குரலை எதிரொலிக்கிறது என்றார்.

உத்தவ் சிவசேனா: உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கூறுகையில், நீட் தேர்வுகளில் முறைகேடுகளே இல்லை என்றார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். ஆனால் பொதுத் தேர்வுகளை தேசியத் தேர்வு முகமை ரத்து செய்து கொண்டிருக்கிறது. தேசியத் தேர்வு முகமை தமது நம்பிக்கையை இழந்துவிட்டது. அப்படி இருக்கும் போது தேசியத் தேர்வு முகமை எப்படி தேர்வுகளை நடத்த முடியும்? என்றார்.

பரூக் அப்துல்லா: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் டாக்டர் பரூக் அப்துல்லா கூறுகையில், மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்கத்தான் செய்வார்கள். வினாத்தாள்களை வாங்குவதற்கு அவர்கள் தயாராகவில்லை. மாணவர்களை இப்போது நெருக்கடியில் தள்ளிவிட்டிருக்கிறது மத்திய அரசு. அதெப்படி நாடு முழுவதும் மறுதேர்வுகளை நடத்திவிட முடியும்? மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் குற்றத்தைத்தான் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்கான பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகிவிட முடியாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+